மருத்துவ கல்லூரி மாணவியின் கழுத்தை அறுத்த காதலன்!
ஆந்திராவில் மருத்துவ கல்லூரி மாணவியை கழுத்தை அறுத்து கொன்ற காதலனை போலீசார் கைது செய்தனர்.
ஆந்திர மாநிலம் கிருஷ்ணா மாவட்டம் கிருஷ்ணாபுரத்தை சேர்ந்தவர் தபஸ்வி (வயது 21). விஜயவாடாவில் உள்ள மருத்துவ கல்லூரியில் பல் மருத்துவம் படித்து வந்தார்.
பெற்றோர் மும்பையில் வசிப்பதால் விஜயவாடாவில் உறவினர் ஒருவரது வீட்டி்ல் தங்கி படித்து வந்தார். இவருக்கும், கிருஷ்ணா மாவட்டம் மணிகொண்டா பகுதியை சேர்ந்த என்ஜினீயர் ஞானேஸ்வர் (25) என்பவருக்கும் இடையே சமூகவலைத்தளம் மூலம் பழக்கம் ஏற்பட்டது.
தினமும் இருவரும் நட்பாக சமூகவலைத்தளம் மூலமாக பழகி வந்த நிலையில், ஒரு கட்டத்தில் அது காதலானது. இருவரும் சில மாதங்கள் காதலித்து வந்தனர். இதற்கிடையே திடீரென காதல் ஜோடிக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு இருவரும் பிரிந்தனர்.
ஆனாலும் காதலர் ஞானேஸ்வர் மாணவிக்கு தொடர்ந்து தொல்லை கொடுத்து வந்தார். அவரது தொல்லை தாங்க முடியாத தபஸ்வி இதுகுறித்து போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் ஞானேஸ்வரை அழைத்து பேசிய பொலிசார், இனிமேல் மாணவியின் வாழ்க்கையில் தலையிட கூடாது என்று எச்சரித்து அனுப்பினார்.
காதலர் தொல்லை காரணமாக விஜயவாடாவில் இருந்து வெளியேறி குண்டூர் மாவட்டம் தக்கெல்லபாடு கிராமத்தில் உள்ள தனது தோழி வீட்டில் தங்கி மாணவி தபஸ்வி படித்து வந்தார்.
காதலர்களுக்கு இடையே உள்ள பிரச்சினையை தீர்த்து வைக்க அந்த தோழி முடிவு செய்தார். எனவே பேச்சுவார்த்தை நடத்துவதற்காக காதலர் ஞானேஸ்வரை தோழி தனது வீட்டிற்கு அழைத்தார்.

அங்கு நேற்று முன்தினம் காதல் ஜோடி பேசிக்கொண்டிருந்தனர். ஒரு கட்டத்தில் ஆத்திரம் அடைந்த மாணவி தபஸ்வி, தான் வேறொருவரை திருமணம் செய்யப்போவதாக தெரிவித்தார்.
இதனால் ஆத்திரம் அடைந்த ஞானேஸ்வர் மறைத்து கொண்டு வந்த அறுவை சிகிச்சை செய்ய பயன்படுத்தும் பிளேடால் மாணவியின் உடல் முழுவதும் வெட்டினார்.
மேலும் ஆட்டை அறுப்பதை போல தபஸ்வியின் கழுத்தை அறுத்தார். இதனை தோழி தடுக்க முயன்றும் அவரால் முடியவில்லை. உடனே தபஸ்வி மயங்கி விழுந்தார்.
இதனை பார்த்ததும் தோழி அலறினார். அதற்குள் ஞானேஸ்வர் தனது கைகளை பிளேடால் அறுத்து தற்கொலைக்கு முயன்றார். சத்தம் கேட்டு சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பொதுமக்கள், ஞானேஸ்வரை பிடித்து கட்டி வைத்தனர். மேலும் மாணவி தபஸ்வியை மீட்டு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.
 ஆனால் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர். 
இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த பொலிசார், காதலர் ஞானேஸ்வரை கைது செய்தனர்.  
 
                 
                 லங்காசிறி FM
                                லங்காசிறி FM
                             
                             
                             
                             
                             
                             
                             
                                             
         
     
     
     
     
     
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
        