வேலன் சுவாமிகளின் கைது தொடர்பில் நாடாளுமன்றக் குழுவின் தலைவர் வெளியிட்ட கண்டனம்!
யாழ். நல்லூர் சிவகுரு ஆதீனத்தின் முதல்வரும், பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான மக்கள் எழுச்சி இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளருமான தவத்திரு வேலன் சுவாமிகள் கைது செய்யப்பட்டமை குறித்து தமிழர்களுக்கான அனைத்துக் கட்சி நாடாளுமன்றக் குழுவின் தலைவரும், கார்ஷால்டன் மற்றும் வாலிங்டனுக்கான நாடாளுமன்ற உறுப்பினருமான எலியட் கோல்பர்ன் தனது டுவிட்டர் பக்கத்தில் கருத்து வெளியிட்டுள்ளார்.
இது தொடர்பில் , கடந்த ஞாயிற்றுக்கிழமை யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற தேசிய பொங்கல் விழாவில் சிறிலங்கா அதிபர் கலந்துகொண்ட போது நடத்தப்பட்ட எதிர்ப்பு போராட்டத்தின்போது காவல்துறையினரின் கடமைக்கு இடையூறு விளைவித்த குற்றச்சாட்டில் அவர் கைது செய்யட்ட பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டார்.
இந்நிலையில், வேலன் சுவாமிகள் கைதுசெய்யப்பட்டமை குறித்து கடும் கண்டனத்தை வெளிப்படுத்தியுள்ள எலியட் கோல்பர்ன் தனது டுவிட்ர் பக்கத்தில் கருத்து தெரிவிக்கையில், கடந்த ஆண்டு வேலன் சுவாமிகளை சந்தித்து அவர் தமிழ் உரிமைகள் தொடர்பான பணிகளைப் பற்றி கேட்டறிந்தேன்.
இலங்கை அதிகாரிகளால் அவர் கைது செய்யப்பட்டமை நம்பமுடியாத கவலையும் அளிக்கிறது.
மேலும் தமிழர் உரிமைகளுக்காக குரல் கொடுப்பவர்களை மௌனமாக்குவதற்கான பிரச்சாரத்தில் அதிகாரிகளின் சமீபத்திய நடவடிக்கை வெட்கக்கேடான நடவடிக்கையை இது பிரதிபலிக்கிறது என்று அவர் கூறியுள்ளார்.