கூட்டமைப்பினருக்கு அவசர அழைப்பு விடுத்த அரசாங்கம்!
ஜனாதிபதி கோட்டாபய (Gotabaya Rajapaksa) மற்றும் பிரதமர் மஹிந்தவுடன் (Mahinda Rajapaksa) பேச்சு நடத்துங்கள். அதன்மூலம் வடக்கு மக்களுக்கு சேவையாற்றுங்கள். நீங்கள் மொட்டு கட்சியில் இணையவேண்டியதில்லை.
ஆனால் அரசின் ஒத்துழைப்புடன் வேலைத்திட்டங்களை முன்னெடுக்கலாம்.” இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினருக்கு ஆளுங்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் சாந்த பண்டார (SHANTHA BANDARA) அழைப்பு விடுத்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் நேற்று நடைபெற்ற வரவு- செலவுத் திட்டத்தின் 2ஆம் வாசிப்புமீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே சாந்த பண்டார (SHANTHA BANDARA) இவ்வாறு அழைப்பு விடுத்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,
அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, (Douglas Devananda) அங்கஜன் ராமநாதன், (Angajan Ramanathan) கலாநிதி சுரேன் ராகவன் (Suren Raghavan) ஆகியோர் அரச பக்கம் இருக்கின்றனர். வடக்கு மக்களுக்கு எதையாவது செய்ய வேண்டும் என்ற சிந்தனையுடன் செயற்பட்டு வருகின்றனர்.
நீங்களும் (ஶ்ரீதரன் எம்.பி.) அதிபராக இருந்துள்ளீர்கள். நானும் ஆசிரியராக செயற்பட்டுள்ளேன். நீங்கள் உள்ளடங்களாக கூட்டமைப்பு எம்.பிக்களிடம் கோரிக்கையொன்றை விடுக்கின்றேன்.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, பிரதமர் மஹிந்த ராஜபக்ச ஆகியோருடன் பேச்சு நடத்துங்கள். சந்திப்புக்கான வாய்ப்பை அவர்கள் நிராகரிக்கமாட்டார்கள்.
மொட்டு கட்சியில் சேர வேண்டியதில்லை. கூட்டமைப்பு எம்.பிக்களாகவே இருந்து, அரசின் ஒத்துழைப்பை பெற்று வடக்கு மக்களுக்கு சேவையாற்றுங்கள். துன்பத்திலிருந்து மக்களை மீட்டெடுங்கள்.
மஹிந்த ராஜபக்ஷவால்தான் நீங்கள் இன்று சுதந்திரமாக வாழ்கின்றீர்கள். சுதந்திரத்தை மஹிந்தவே பெற்றுக்கொடுத்தார்.
தமிழ் பெண்களின் கண்ணீரையும் அவரே துடைத்தார். வடக்கு, கிழக்கில் பாரிய அபிவிருத்திகளை செய்துள்ளார். இதனை மறந்துவிட வேண்டாம்.ஆளுங்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் சாந்த பண்டார தெரிவித்துள்ளார்.