ஆடிக்கிருந்திகை இன்று; முருகப்பெருமானின் மகத்துவம் வாய்ந்த நாள்
தமிழ் மாதங்களில் மூன்று கிருத்திகைகள் முக்கியத்துவம் வாய்ந்தவை. தை கிருத்திகை விசேஷம். அதேபோல், கார்த்திகை மாதத்தில் வரும் கிருத்திகை நட்சத்திரமும் சிறப்பு வாய்ந்தது.
இதேபோல, ஆடி மாதத்தில் வருகிற கிருத்திகை மகத்துவம் வாய்ந்ததாகப் போற்றப்படுகிறது.

சிவபெருமானின் அருளால் ஆடி கிருத்திகை தினத்தில் சூரனை அழிக்க முருகப்பெருமான் சரவணப் பொய்கையில் ஆறு குழந்தைகளாக அவதரித்தார். அந்தக் குழந்தைகளை ஆறு கார்த்திகைப் பெண்கள் பாலூட்டி, சீராட்டி, பாராட்டி வளர்த்தனர். கார்த்திகைப் பெண்களை கவுரவிக்கும் வகையில் அவர்கள் ஆறு பேரும் கார்த்திகை நட்சத்திரமாக மாறினார்கள்.
முருகக் கடவுளை ஆராதித்தவர்களுக்கு நட்சத்திரப் பட்டமும் கிடைத்தது. அதுமட்டுமின்றி, கிருத்திகை நட்சத்திர நாளில், முருகப் பெருமானை வழிபடும் வழக்கமும் ஏற்பட்டது என புராணங்கள் விவரிக்கின்றன.
ஆறுமுகப்பெருமானின் அவதாரங்கள் ஒவ்வொன்றும் சிறப்புடையது. அத்தகைய சிறப்புடைய முருகனை ஆடிக்கிருத்திகையில் வழிபட்டால் எல்லா வளமும் கிடைக்கும். ஆடிக்கிருத்திகை நாளில் அனைத்து முருகன் கோயில்களிலும் பல்வேறு சிறப்பு வழிபாடுகள், அபிஷேகம், அலங்காரம், என கொண்டாட்டமாக உற்சவங்கள் நடைபெறும்.
முருகன் ஆலயங்களில் எல்லாம் கந்தனுக்கு அரோகரா என்ற பக்தி முழக்கம் விண்ணை எட்டும். காவடிப் பிரியனான கந்தனுக்கு அவரவர் வேண்டுதலுக்கு ஏற்ப பால் காவடி, பன்னீர் காவடி, புஷ்ப காவடி, மச்சக்காவடி, சேவல் காவடி, தீர்த்தக் காவடி என பல்வேறு விதமாக காவடி எடுத்தும், அலகு குத்தியும் பக்தர்கள் நேர்த்திக் கடன்களை நிறைவேற்றுவர்கள்.

இந்த உன்னதமான நாளில் முருக வழிபாடு செய்தால், நம்மை அச்சுறுத்தும் சக்திகளையும் எதிரிகளையும் அழிப்பார் ஆறுமுகக் கடவுள். ஆடிக்கிருத்திகை விரதம் மேற்கொண்டு கந்த சஷ்டி கவசம் படித்தால் உயர்ந்த பதவிகள் தேடி வரும் என்பது ஐதீகம்.
ஆடிக்கார்த்திகை நாளில் அதிகாலையில் எழுந்து குளித்து விட்டு கந்தசஷ்டி கவசம் பாராயணம் செய்து, முருகனின் வேலுக்கு பாலபிஷேகம் செய்து, மனதாரப் பிரார்த்தனை செய்தால் நினைத்த காரியம் யாவும் கைகூடும் என்பது நம்பிக்கை.
ஆடிக் கிருத்திகை நாளில், முருகப்பெருமானுக்கு செவ்வரளி மாலை சார்த்தி, சர்க்கரைப் பொங்கல் நைவேத்தியம் செய்து அக்கம்பக்கத்தாருக்கு வழங்க நம்முடைய வீட்டில் சந்தோஷம் அதிகரிக்கும் என்பது நம்பிக்கை.
ஆடிக்கிருத்திகை நாளில் முருகப்பெருமானை வணங்கினால் சூரனை சம்ஹாரம் செய்த வீரம் நிறைந்த முருகப் பெருமான், உங்கள் வாழ்வில் தடைகளை நீக்கி உங்கள் விருப்பங்கள் நிறைவேற்றுவார்.
மேலும் எதிரிகளை வெல்லும் சக்தியைக் கொடுப்பார். முருகனை வழிபட்டால் பூமி சம்பந்தமான தொழிலில் ஏற்படும் பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்கும்.