ஒரே வாக்கில் முடிவடைந்த அரசியலமைப்பு பேரவை போட்டி ; சிறிதரன் தெரிவு முழு பின்னணி
ஆளும் கட்சி, எதிர்க்கட்சி மற்றும் சிறுபான்மைக் கட்சிகள், தங்களின் நாடாளுமன்ற பலத்திற்கேற்ப உறுப்பினர்களை அரசியலமைப்பு பேரவைக்கு பரிந்துரைக்கின்றன.
அரசியலமைப்புச் சட்டத்தின் அடிப்படையில், நாடாளுமன்றத்தில் பிரதிநிதித்துவம் பெற்ற அரசியல் கட்சிகள் மற்றும் நாட்டின் சுயாதீன, நிபுணத்துவ சமூகத்தின் பிரதிநிதிகள் அடங்கியதாக அரசியலமைப்பு பேரவை உருவாக்கப்படுகிறது.
இந்தப் பேரவையில் சிறுபான்மை கட்சிகளை பிரதிநிதித்துவப்படுத்த ஒரு உறுப்பினரை மட்டும் நியமிக்கும் அதிகாரம் உள்ளது.
அந்த அடிப்படையிலேயே இலங்கை தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் அரசியலமைப்பு பேரவைக்கு தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.

சிறுபான்மை கட்சிகளின் நாடாளுமன்ற பிரதிநிதித்துவம்
இலங்கை தமிழரசுக் கட்சி – 08
புதிய ஜனநாயக முன்னணி – 05
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் – 03
ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி – 03
சர்வஜன அதிகாரம் – 01
ஐக்கிய தேசியக் கட்சி – 01
ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி – 01
தமிழ் தேசிய மக்கள் முன்னணி – 01
ஊசி – சுயேட்சைக் குழு – 01
இலங்கை தொழில் கட்சி – 01
அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் – 01
இந்த 11 கட்சிகளின் மொத்தம் 26 நாடாளுமன்ற உறுப்பினர்களில், 21 உறுப்பினர்கள் மட்டுமே அரசியலமைப்பு பேரவை தெரிவுக்கான கூட்டத்தில் பங்கேற்று வாக்களித்தனர். வாக்கெடுப்பு விபரம் அரசியலமைப்பு பேரவை குழு தெரிவு 2024 டிசம்பர் 06 அன்று நடைபெற்றது.
இதில் இரு பெயர்கள் முன்மொழியப்பட்டன. அதில் சிவஞானம் சிறிதரன், ஜீவன் தொண்டமான் ஆகியோரின் பெயர் முன்மொழியப்பட்டன.
இரகசிய வாக்கெடுப்பில்,
சிவஞானம் சிறிதரன் – 11வாக்குகளும் ஜீவன் தொண்டமான் – 10 வாக்குகளும் பெற்றிருந்த நிலையில் ஒரு மேலதிக வாக்கின் அடிப்படையில் சிவஞானம் சிறிதரன் தெரிவுசெய்யப்பட்டார்.
இருப்பினும், தமிழரசுக் கட்சியின் 08 உறுப்பினர்களில் ஒருவர் சிறிதரனுக்கு வாக்களிக்கவில்லை என்பதால், அவருக்கு 12 வாக்குகள் கிடைத்திருக்க வேண்டுமென அரசியல் வட்டாரங்களில் கருத்து தெரிவிக்கப்படுகிறது.

அரசியலமைப்பு பேரவை தொடர்பான முக்கிய அம்சங்கள் அரசியலமைப்பு பேரவை உறுப்பினர் பதவி, அரசியல் கட்சியால் நேரடியாக நியமிக்கப்படுவதல்ல. அந்தக் கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்களின் வாக்குகளின் அடிப்படையிலேயே தெரிவு செய்யப்படுகிறது.
10 உறுப்பினர்களைக் கொண்ட அரசியலமைப்பு சபைக்கு சபாநாயகர் தலைவராக இருப்பார்.
பேரவை உறுப்பினர்கள் எந்த விடயத்திலும் ஆதரவாக அல்லது எதிராக வாக்களிக்க வேண்டும்; வாக்களிப்பை தவிர்க்கும் உரிமை இல்லை. அரசியலமைப்பு பேரவை உறுப்பினர்களை நீக்கும் அதிகாரம் அரசியல் கட்சிகளுக்கு இல்லை; ஆலோசனை வழங்க மட்டுமே முடியும்.
சிறுபான்மை கட்சிகளை பிரதிநிதித்துவப்படுத்தும் உறுப்பினர் ஒருவர் பதவி விலகினாலோ அல்லது மரணித்தாலோ, அனைத்து சிறுபான்மை கட்சிகளின் இணக்கப்பாட்டுடன் புதிய ஒருவரின் பெயர் பரிந்துரைக்கப்பட்டு, சபாநாயகரால் அந்த வெற்றிடம் நிரப்பப்படும்.