ஐக்கிய தேசியக் கட்சியின் யாப்பில் ஏற்படவுள்ள மாற்றம் !
ஐக்கிய தேசிய கட்சியின் செயற்குழு புதன்கிழமை (02.08.2023) மாலை கட்சியின் தலைவரும் ஜனாதிபதியுமான ரணில் விக்ரமசிங்கவின் தலைமையில் கட்சி தலைமையகமான சிறிகொத்தவில் கூடியது.
இதன்போது எடுக்கப்பட்ட தீர்மானங்கள் தொடர்பாக கட்சியின் செயலாளர் பாலித்த ரங்கே பண்டார ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கையில் ,
ஐக்கிய தேசிய கட்சியின் 77ஆவது கட்சி சம்மேளனத்தை நடத்துவது தொடர்பாகவும் கட்சியின் யாப்பை மாற்றுவது தொடர்பாகவும் கட்சியின் செயற்குழுவின்போது தீர்மானிக்கப்பட்டதாக தெரிவித்தார்.
இது தொடர்பாக அவர் தொடர்ந்து தெரிவிக்கையில், எதிர்வரும் செப்டம்பர் மாதம் 10ஆம் திகதி ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் தலைமையில் கட்சி சம்மேளனத்தை நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டது.
அத்துடன் , போராட்டத்தின்போது மக்கள் தெரிவித்ததன் பிரகாரம் முறைமாற்றத்துக்கு ஏற்புடையதாக கட்சியின் யாப்பையும் அதற்கு இணையாக மாற்றத்துக்கு உட்படுத்த இருக்கிறோம்.
அதேபோன்று, கட்சியின் செயற்குழுவால் தடை செய்யப்பட்டிருந்த ஹிரன் பெர்ணான்டோ மற்றும் மனுஷ நாணயக்கார ஆகிய இருவருக்கும் செயற்குழுவின் அங்கத்துவத்தை மீண்டும் வழங்குவதற்கு செயற்குழு இணக்கம் தெரிவித்தது.
செயற்குழுவுக்கு மேலதிகமாக நிறைவேற்று குழுவை பலப்படுத்தவும் தீர்மானங்களை எடுக்கும் இடமாக நிறைவேற்றுக்குழுவை ஏற்படுத்தவும் அரசியல் நடவடிக்கைகளை மேற்கொள்ளவதற்காக வேறு குழுவொன்றை அமைப்பதற்கும் இணையவழி முறைமைக்கு ஒத்திசைவாக கட்சியை ஏற்பாடு செய்வது தொடர்பாகவும் இதன்போது கலந்துரையாடப்பட்டது.
75 அரசியல் தொகுதி மாநாடுகளை நடத்துவதற்கே ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க எமக்கு ஆலோசனை வழங்கினார்.
என்றாலும் நாங்கள் தற்போது 132 அரசியல் தொகுதி மாநாடுகளை நடத்தி இருப்பதையிட்டு, தொகுதி மாநாடுகளை ஏற்பாடுசெய்த அனைவருக்கும் ஜனாதிபதி தனது நன்றிகளை இதன்போது தெரிவித்தார் என்றும் குறிப்பிட்டார்.