படப்பிடிப்பு தளத்தில் தற்கொலை செய்து கொண்ட நடிகை
படப்பிடிப்பு இடைவெளை வேளையில் மேக்கப் ரூமில் தூக்கில் தொங்கிய நிலையில் பிரபல நடிகை துனிஷா சர்மா தற்கொலை செய்துகொண்டுள்ளதாக இந்திய செய்தி ஊடகம் தகவல் வெளியிட்டுள்ளது
பொலிவுட் படங்களில் குழந்தை நட்சத்திரமாக 20 வயதுடைய துனிஷா சர்மா அறிமுகமாகி உள்ளார்.
அதிகமான படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்திருக்கும் இவர் தற்போது தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் தலைகாட்டி வருகிறார்.
மும்பை அருகில் உள்ள வசாய் நைகாவ் ராம்தேவ் ஸ்டூடியோவில் நேற்று சனிக்கிழமை (டிச. 24) தொலைக்காட்சி நிகழ்ச்சியொன்றின் படப்பிடிப்பில் துனிஷா சர்மா கலந்துகொண்டார்.
படப்பிடிப்பின்போது மதிய உணவுக்கு இடைவேளை விடப்பட்டது. அந்த நேரத்தில் துனிஷா அவருடன் நடித்த சகீன் மொகமத் கானின் மேக்அப் அறைக்குச் சென்றுள்ளார்.
சம்பவம்
மொகமத் கான் தனது பகுதியின் படப்பிடிப்பு முடிந்து வந்தபோது மேக்அப் அறையின் கதவு திறக்கப்படவில்லை இதனால் கதவை உடைத்துக்கொண்டு உள்ளே சென்று பார்த்தபோது உள்ளே துனிஷா குளியலறையில் தூக்கில் தொங்கிக்கொண்டிருந்துள்ளதாக கூறப்படுகிறது.
உடனே அவரை படப்பிடிப்பில் இருந்தவர்கள் மீட்டு வைத்தியசாலையில் சேர்த்துள்ளனர். அவ்வேளை அவரை பரிசோதித்த வைத்தியர்கள் துனிஷா ஏற்கெனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர்.
இது குறித்து பொலிஸார் படப்பிடிப்புத் தளத்தில் இருந்தவர்களிடம் அனைத்து கோணத்திலும் விசாரித்து வருவதாக தெரிவித்துள்ளனர்.
துனிஷா சர்மா 'அலிபாபா தஸ்தான்-இ-காபூல்' என்ற தொலைக்காட்சி தொடரில் நடித்து வந்துள்ள நிலையிலேயே உயிரிழந்துள்ளார்.
துனிஷாவின் இறப்பு தொடர்பான விசாரணைக்காக சகீன் மொகமத் கான் அழைத்துச் செல்லப்பட்டுள்ளதாக பொலிஸ் அதிகாரி சந்திரகாந்த் ஜாதவ் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் தற்கொலைக்கு முன்பு சர்மா எந்த விதமான கடிதமும் எழுதி வைத்திருக்கவில்லை. எனினும், துனிஷா சர்மா, சகீன் மொகமத் கானை காதலித்து வந்ததாகவும், அவரால்தான் துனிஷா தற்கொலை செய்துகொண்டதாகவும் துனிஷாவின் தாயார் குற்றம் சாட்டியிருக்கிறார்.