முல்லைத்தீவு நோக்கி மெதுவாக நகரும் தாழமுக்கம் ; யாழ் பல்கலைக்கழக விரிவுரையாளர் பிரதிபராஜா எச்சரிக்கை
வங்காள விரிகுடாவில் திருகோணமலைக்கு கிழக்காக 80 கி.மீ. தொலைவில் காணப்படும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் தொடர்ச்சியாக வடக்கு நோக்கி நகர்ந்து வருகிறது என யாழ் பல்கலைக்கழக புவியியல்துறை பேராசிரியர் நாகமுத்து பிரதிபராஜா தெரிவித்தார்.
இந்த விடயம் குறித்து மேலும் தெரியவருகையில்,
நேற்று காலை 9.00 மணியிலிருந்து இதனைடைய நகர்வு வேகம் மிக மிக குறைவாகவே (மணிக்கு 3-5) இருந்தது. இது இன்று (10.01.2026) காலை முல்லைத்தீவுக்கு அண்மித்து வடக்கு மாகாணத்தின் நிலப்பகுதியில் நுழைந்து பின்னர் யாழ்ப்பாணத் தினூடாக பாக்கு நீரிணைக்கு செல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதனால் தற்போது வடக்கு மாகாணத்தின் பல பகுதிகளுக்கும் கிடைத்து வரும் தூறல் மற்றும் மிதமான மழை இன்று இரவு முதல் படிப்படியாக அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இன்று காலை வடக்கு மாகாணத்தின் பல பகுதிகளுக்கும் கனமான மழை கிடைக்கும் வாய்ப்புள்ளது.
தற்போது வடக்கு மாகாணத்தின் கரையோரப் பகுதிகளில் காற்றின் வேகம் மணிக்கு 40 கி.மீ.என்ற அளவில் உள்ளது அதேவேளை உள்நிலப்பகுதிகளில் காற்றின் வேகம் மணிக்கு 30 கி.மீ. என்ற அளவில் உள்ளது.
இது படிப்படியாக அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. வடக்கு மாகாணத்தின் பல இடங்களிலும் கடல் மிக கொந்தளிப்பான நிலையில் காணப்படுவதனால் சில இடங்களில் கடல்நீர் உள்வரும் செயற்பாடும் அவதானிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலை இன்று மாலை வரை நீடிக்கும். வடக்கு மாகாணத்தின் பல பகுதிகளிலும் குளிரான வானிலை நிலவுகிறது. இந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் வடக்கு மாகாணத்தின் ஊடாக ஈரப்பதனை உள்ளிழுப்பதனாலேயே இந்த குளிரான நிலைமை காணப்படுகின்றது.
இந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் வடக்கு மாகாணத்தை விட்டு வெளியேறியதன் பின் குளிர் குறைவடையும். எனவே இந்த நிலைமைகள் தொடர்பில் மக்கள் தொடர்ந்தும் அவதானமாக இருப்பது அவசியம். கிழக்கு மாகாணத்தின் பல பகுதிகளுக்கும் அவ்வப்போது மிதமான மழை கிடைக்கும்.
ஆனால் சில பகுதிகளுக்கு சற்று கனமான மழை கிடைக்கும். காற்றும் சற்று உயர்வான வேகத்தில் வீசும் என அவர் அறிக்கை வெளியிட்டுள்ளார்.