எனக்காக பிரார்த்தனை செய்தமைக்கு நன்றி! அஜித் ரோஹண
' நான் நலமாக உள்ளேன். என்னைப் பற்றி சுகம் விசாரித்து, விரைவாக நலம் பெற பிரார்த்தனை செய்த உங்கள் அனைவருக்கும் நன்றி' என கொரோனா தொற்றுக்குள்ளாகி சிகிச்சைப் பெற்று வரும் முன்னாள் பொலிஸ் பேச்சாளரும், பொலிஸ் குற்றவியல் மற்றும் போக்குவரத்து பிரிவின் பிரதானியுமான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.
வைத்தியசாலையிலிருந்தவாறு சமூக வலைத்தளம் ஊடாக அவர் இந்த செய்தியை வெளிப்படுத்தினார். ' நான் தற்போது நலமடைந்து வருகின்றேன்.
இன்னும் மூன்று நான்கு நாட்களில் எனக்கு வீட்டுக்கு செல்ல முடியும் என வைத்தியர்கள் கூறினர். நான் கவலைக்கிடமாக இருப்பதாக கூறி வேறு ஒருவரின் புகைப்படங்கள் பகிரப்பட்டதாக அறிகிறேன்.
எனினும் அதிலும் நான் மிக விரைவாக சுகம் பெற வேண்டும் என்ற பிரார்த்தனைகளே இருந்தன. அது தொடர்பில் எனக்கு மகிழ்ச்சி.' என அஜித் ரோஹண தெரிவித்தார்.
சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹணவின் நிலைமை நல்ல நிலையில் உள்ளதாக அவர் சிகிச்சைப் பெறும் வைத்தியசாலையும், பொலிஸ் தலைமையகமும் வீரகேசரிக்கு உறுதி செய்தன.
அஜித் ரோஹண கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டதாக உறுதியானதையடுத்து சமூக வலைத் தளங்களிலும் இணையத்திலும் அவர் தொடர்பில் பல்வேறு தகவல்கள் வெளியிடப்பட்டு வந்த நிலையிலேயே, சமூக வலைத் தளங்களில் புகைப்படத்தையும் வெளியிட்டு தான் தேறிவருவதை அஜித் ரோஹண உறுதி செய்துள்ளார்.