தொடரும் தடைகள்; திட்டமிட்டபடி ஜனநாயகன் வெளிவருமா.. பெரும் எதிர்பார்ப்பில் ரசிகர்கள்!
விஜய்யின் கடைசி படம் என்பதால், ஜனநாயகன் மீதான எதிர்பார்ப்பும் சர்ச்சையும் உச்சகட்டத்தில் உள்ளது.
நடிகர் விஜய் நடித்துள்ள 'ஜனநாயகன்' திரைப்படத்தின் தணிக்கை தொடர்பான வழக்கில், ஜனவரி 9ம் திகதி படம் வெளியாக வேண்டிய நிலையில், உயர்நீதிமன்றம் தீர்ப்பை ஒத்திவைத்துள்ளது.

தணிக்கை வாரியத்திற்கு அடுக்கடுக்கான கேள்வி
சென்னை உயர்நீதிமன்றம் தணிக்கை வாரியத்திற்கு அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பியுள்ளது.
படத்திற்கு ஏற்கனவே 'U/A' சான்றிதழ் வழங்க முடிவெடுத்த பிறகு, மீண்டும் அதனை மறு ஆய்வுக்கு அனுப்பியது ஏன் என்று நீதிபதி கேள்வி எழுப்பினார்.
மேலும், சான்றிதழ் வழங்க ஒப்புதல் அளித்த அதே தணிக்கை குழுவில் இருந்த ஒருவரே, தனது ஆட்சேபனைகள் பரிசீலிக்கப்படவில்லை என்று புகார் அளித்திருப்பது நிலைக்கத்தக்கதல்ல என்றும் நீதிமன்றம் சுட்டிக்காட்டியது.

இதற்கு பதிலளித்த தணிக்கை வாரியம், படத்தை பார்த்த குழுவில் இடம்பெறாத புதிய உறுப்பினர்களை கொண்டு மறு ஆய்வு செய்ய வாரிய தலைவருக்கு அதிகாரம் உள்ளதாக வாதிட்டது.
ராணுவ நிபுணர்களிடம் ஆலோசனை
திரைப்படத்தில் பாதுகாப்பு படைகளின் சின்னங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளதால், அது குறித்து ராணுவ நிபுணர்களிடம் ஆலோசனை பெற வேண்டியது அவசியம் எனவும் வாரியம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இது குறித்து விரிவான பதில் மனுத்தாக்கல் செய்ய அவகாசம் கேட்ட வாரியம், நீதிமன்றத்தின் அனைத்து கேள்விகளுக்கும் பதில் அளிக்கப்படும் என உறுதியளித்துள்ளது. அதேவேளை ஜனவரி 9ம் திகதி படம் வெளியாக வேண்டிய நிலையில், உயர்நீதிமன்றம் தீர்ப்பை ஒத்திவைத்துள்ளது.
இந்நிலையில் நாளை ஜனவரி 8ம் தேதி தீர்ப்பு வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும் 9ம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது ஜனநாயகன் மீதான எதிர்பார்ப்பும் சர்ச்சையும் உச்சகட்டத்தில் உள்ளது.
ஜனநாயகன் படம் ஜன.9-ஆம் தேதி வெளியாவதாக அறிவிக்கப்பட்ட நிலையில், நாளையோ அல்லது நாளை மறுதினம் காலையோ தீர்ப்பும் வெளியாகும் எனத் தெரிவதால், இப்படம் திட்டமிட்டபடி வெளியாகுமா எனக் கேள்வி எழுந்துள்ளது.