வங்காள விரிகுடாவில் தாழமுக்கம் ;வளிமண்டலவியல் திணைக்களம் சிவப்பு அறிவித்தல்!
நாட்டில் தற்போது நிலவும் சீரற்ற காலநிலையால் பலத்த காற்று மழை தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களம் சிவப்பு அறிவித்தலை விடுத்துள்ளது.
நாட்டின் ஊடாக நிலவும் தென்மேற்கு பருவமழை காரணமாக மழை மற்றும் காற்றின் நிலைமை தொடர்ந்து அதிகரிக்கும் என திணைக்களம் வெளியிட்டுள்ள புதிய அறிவித்தலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சப்ரகமுவ மாகாணத்திலும் கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டத்திலும் சில இடங்களில் 150 மில்லி மீற்றர் அளவான கனமழை பெய்யக்கூடும் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அதேநேரம், மேல், வடமேல் மாகாணங்களிலும் மன்னார், காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் 100 மில்லி மீற்றருக்கும் அதிகளவான பலத்த மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.
வங்காள விரிகுடாவில் தாழமுக்கம்
அதேவேளை வங்காள விரிகுடாவில் தாழமுக்கம் ஒன்று உருவாகி உள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களமும், இந்திய வானிலை ஆய்வு மையமும் உறுதிப்படுத்தியுள்ளன. தென்கிழக்கு வங்காள விரிகுடா மற்றும் அதனையொட்டிய மேற்கு-மத்திய வங்காள விரிகுடா கடற் பிராந்தியத்தில் நேற்றிரவு தாழமுக்க நிலையொன்று உருவாகியுள்ளது.
இது எதிர்வரும் நாட்களில் வடகிழக்குக் திசையில் நகர்ந்து, படிப்படியாக வலுவடைந்து நாளையதினம் தாழமுக்கமாக மாறும் சாத்தியம் உள்ளதாகவும் எதிர்வு கூறப்பட்டுள்ளது.
அத்துடன் குறித்த தாழமுக்கம் காரணமாக அது சூறாவளியாக உருவாகலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. இந்த சூறாவளிக்கு Oman நாட்டினால் பரிந்துரை செய்யப்பட்ட Remal (Pronounce as Re-Mal) எனும் பெயர் வழங்கப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகின்றது.
இதன் காரணமாக மீனவர் மற்றும் கடல் சார் தொழிலாளர்கள் சிவப்பு நிறம் தீட்டப்பட்ட பிராந்தயங்களில் எவ்வித செயற்பாடுகளிலும் ஈடுபட வேண்டாம் எனவும் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.