தைப்பூச நாளில் வீட்டில் செய்யக்கூடிய எளிய வழிபாட்டு முறை
முருகப் பெருமானின் அருளை பெறுவதற்கு ஏற்ற தினம் தைப்பூச திருநாளாகும். இந்த நாளில் முருகப் பெருமானுக்கு எப்படி விரதம் இருக்க வேண்டும்? எப்படி வழிபட வேண்டும் என்பதை நாம் இங்கு பார்ப்போம்.
தை மாதத்தில் பெளர்ணமி திதியும், பூசம் நட்சத்திரமும் இணைந்து வரும் நாளிலேயே தைப்பூசம் விழா கொண்டாடப்பட்டு வருகிறது. தைப்பூசத்தில் முருகனுக்கு விரதம் இருந்த வழிபட்டால் தீராத பிரச்சனைகளும் தீரும் என சொல்லப்படுகிறது. முருகப் பெருமானின் தீவிர பக்தர்கள் தைப்பூசத்திற்காக 48 நாட்கள் விரதம் இருந்து வருகின்றனர்.
தைப்பூசம் இந்த ஆண்டு பெப்ரவரி 11ம் திகதி அதாவது நாளைய தினம் செவ்வாய்கிழமை அன்று வருகிறது.
வீட்டிலேயே விரதம் இருக்கும் முறை
கோவிலுக்கு செல்ல முடியாதவர்கள் வீட்டிலேயே விரதம் இருக்கலாம். பூஜை அறையில் ஷட்கோண கோலமிட்டு, ஆறு அகல் விளக்குகளில் விளக்கேற்றி வைத்து வழிபட வேண்டும். முருகனுக்குரிய மந்திரங்களை, பாடல்களை படித்து வழிபட வேண்டும்.
முடிந்தவர்கள் முழு உபவாசமாகவும், முடியாதவர்கள் எளிமையான உணவுகளை எடுத்துக் கொண்டும், பால் பழம் மட்டும் சாப்பிட்டும் விரதம் இருக்கலாம். மாலையில் முருகனுக்கு நைவேத்தியம் படைத்து, மனதார வழிபட்ட பிறகு, விரதத்தை நிறைவு செய்ய வேண்டும். முருகனுக்குரிய ஓம் சரவண பவ மந்திரத்தை தொடர்ந்து உச்சரித்தபடி இருக்க வேண்டும்.
தைப்பூசத்தில் முருகனுக்கு படைக்க வேண்டியவை
தைப்பூசம் அன்று பச்சரிசியில் மஞ்சள் கலந்து வைத்து, அதன் மீது ஆறு அகல் விளக்குகள் ஏற்றி வைத்து வழிபட வேண்டும். அந்த ஆறு விளக்குகளுக்கு முன்பு ஆறு தாமரை மலர்கள் வைத்து வழிபட வேண்டும். முருகப் பெருமானுக்கு சர்க்கரை பொங்கலுடன், கருப்பு கொண்டைக் கடலை சுண்டல் செய்து நைவேத்தியமாக படைக்க வேண்டும்.
அதே போல் முருகப் பெருமானுக்கு செவ்வரளி மாலை சூட்டுவதும், செவ்வரளி மலர்களால் அர்ச்சனை செய்து வழிபடுவதும் மிக மிக சிறப்பானதாகும். இப்படி வழிபடுவதால் முருகன், சந்திரன், குரு பகவான் ஆகியோரின் அருளை பெற முடியும். இதனால் செவ்வாய் தோஷம் நீங்குவதுடன் செவ்வாய் பகவானின் அருளால் வீடு, சொத்து, வாகனம் வாங்கும் யோகமும் ஏற்படும்.