நாடாளுமன்றத்திற்கு அருகில் மோசமடையும் நிலைமை
புதிய இணைப்பு
நாடாளுமன்றத்திற்கு அருகில் பதற்ற நிலை அதிகரித்து வருவதாக அங்கிருக்கும் எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார். இந்த நிலையில் அப்பகுதியில் பாதுகாப்பு தரப்பினரால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் இருவர் பலத்த காயங்களுக்கு உள்ளாகிய நிலையில் கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு அனுப்பப்பட்டுள்ளனர்.
அத்துடன் வீதித்தடைகளை அகற்றுவதற்காக போராட்டக்காரர்கள் ஜேசிபி இயந்திரத்துடன் வந்து வீதித்தடைகளை அகற்ற முற்பட்ட போது அந்த முயற்சி பாதுகாப்பு தரப்பினரால் முறியடிக்கப்பட்டுள்ளது. இதேவேளை அப்பகுதியில் மின் துண்டிப்பு செய்யப்பட்டுள்ளதால் அப்பகுதி முற்றாக இருளில் மூழ்கியுள்ளதாக அங்கிருக்கும் எமது செய்தியாளர் தெரிவித்தார்.
அத்துடன் அப்பகுதியில் பொலிஸாரால் போராட்டக்காரர்கள் மீது தாக்குதல்கள் நடத்தப்படுவதுடன், தொடர் துப்பாக்கிப்பிரயோக சம்பவங்களும் பதிவாகி வருவதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
முதலாம் இணைப்பு
நாடாளுமன்றத்தை முற்றுகையிடும் நடவடிக்கையில் ஆர்ப்பாட்டக்காரர்கள் ஈடுபட்டுள்ளதனால் அங்கு பதற்ரநிலை ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிகின்றன.
இந்நிலையில் நாடாளுமன்ற வளாகத்தில் பாரிய அளவிலான மக்கள் ஒன்றுக்குகூடியுள்ளதாக தெரியவந்துள்ளது. இதனையடுத்து அங்கு கண்ணீர் புகை பிரயோகம் மேற்கொள்ளப்பட்டு ஆர்ப்பாட்டக்காரர்களை விரட்டியடிக்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
அதேவேளை அங்கு சபாநாயகரின் இல்லம் அமைந்துள்ளமையினால் பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
சபாநாயகரின் இல்லத்தில் பதில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தங்கியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ள நிலையில் சபாநாயகரின் வீடும் முற்றுகையிட வாய்ப்புகள் உள்ளதாக அந்த தகவல்கள் மேலும் தெரிவிக்கின்றன.
இந்நிலையில், பாராளுமன்றத்தை நோக்கி படையெடுத்த ஆர்ப்பாட்டக்காரர்களை பொல்துவ சந்தியில் வைத்து தடுத்த பொலிஸாரும் படையினரும் அவர்கள் மீது கண்ணீர்புகைக்குண்டு வீசியும் தண்ணீர் பீச்சியடித்தும் கலைத்துள்ளனர்.