TELL IGP மற்றும் l-need சேவைகளை புதிய வடிவத்தில் ஆரம்பிக்க பொலிஸார் நடவடிக்கை
TELL IGP (பொலிஸ்மா அதிபருக்கு சொல்லுங்கள்) மற்றும் l-need சேவைகளை புதிய வடிவத்தில் ஆரம்பிக்க பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
இந்த சேவைகள் இன்று (06) பதில் பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரியவினால் பொலிஸ் தலைமையகத்தில் வைபவ ரீதியாக அறிமுகம் செய்து வைக்கப்பட்டது.
பொதுமக்களுடன் மிகவும் நெருக்கமாகச் செயற்படுவது மற்றும் அவர்களின் பிரச்சினைகளுக்கு உடனடியாகப் பதிலளிப்பது போன்ற நோக்கத்துடன் இலங்கை பொலிஸ் இந்தத் திட்டங்களை நடைமுறைப்படுத்துகிறது.
TELL IGP (பொலிஸ்மா அதிபருக்கு சொல்லுங்கள்) திட்டத்தின் மூலம், பொதுமக்கள் நேரடியாக பொலிஸ் மா அதிபரிடம் முறைப்பாடுகள், கருத்துக்கள் மற்றும் ஆலோசனைகளை சமர்ப்பிக்கும் வசதி வழங்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
மேலும், TELL IGP சேவையின் ஊடாக பொலிஸ் மா அதிபரின் கவனத்திற்கு நேரடியாகக் கொண்டுவரப்பட வேண்டிய விடயங்கள், பொலிஸ் நிலையங்களில் விசாரணை செய்யப்படாத முறைப்பாடுகள் மற்றும் பொலிஸ் அதிகாரிகளின் தவறுகள் குறித்து 24 மணி நேரமும் முறைப்பாடு செய்யலாம்.
குறித்த முறைப்பாடுகள் தொடர்பில் உடனடியாக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
இதற்கிடையில், கைப்பேசி தொலைந்து போனால் பொலிஸ் நிலையம் செல்லாமல் இணையவழி ஊடாக தொலைந்து போன கைப்பேசி தொடர்பான தகவல்களை வழங்கி முறைப்பாடு அளிக்கும் வசதியை I-need சேவை வழங்கியுள்ளது.
தொலைந்து போன கைப்பேசியை ஒருவர் பயன்படுத்தினால், முறைப்பாட்டாளருக்கு இந்த சேவையின் ஊடாக அறிவிக்கப்படும்.
மேலும், www.police.lk என்ற உத்தியோகபூர்வ இணையத்தளத்திற்கு பிரவேசித்து E-Services ஊடாக TELL IGP மற்றும் l-need சேவை மூலம் இந்த சேவைகளை அணுக முடியும் எனவும், 24 மணி நேரமும் முறைப்பாடு செய்ய சந்தர்ப்பம் உள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.