வவுனியா சென்ற அரச பேருந்து மோதி ஆசிரியை பலி
யாழ்ப்பாணம் - கண்டி பிரதான வீதியின் பூனாவை, கும்புகொல்லேவ பகுதியில் பஸ் மோதி விபத்துக்குள்ளானதில் பாடசாலை ஆசிரியை ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இன்று (18) காலை, கண்டியிலிருந்து வவுனியா நோக்கி பயணித்த இலங்கை போக்குவரத்துச் சபைக்குச் சொந்தமான பஸ் ஒன்று, மோட்டார் சைக்கிளுடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

இதன்போது, மோட்டார் சைக்கிளில் பயணித்த ஆசிரியை நிலைதடுமாறி விழுந்து, பஸ் பின் சக்கரத்தில் சிக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவர் பூனாவை, கல்கந்தேகம வித்தியாலயத்தில் ஆசிரியையாகப் பணிபுரிந்து வந்த 56 வயதுடைய பெண் என தெரியவந்துள்ளது.
ஆசிரியையின் சடலம் பிரேத பரிசோதனைகளுக்காக வவுனியா வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது. விபத்து தொடர்பாக இலங்கை போக்குவரத்துச் சபை பஸ்ஸின் சாரதி பொலிஸாரால் கைது செய்யப்பட்டு மேலதிக விசாரணைகளில் பூனாவை பொலிஸார் ஈடுபட்டு வருகின்றனர்.