தங்காலை போதைப்பொருள் சம்பவம்; மகனை விசாரணை செய்ய அனுமதி!
அம்பாந்தோட்டை தங்காலை, சீனிமோதர பகுதியில் செப்டெம்பர் 22 ஆம் திகதி வீடொன்றிலிருந்து இரண்டு சடலங்கள் மீட்கப்பட்டதுடன் அந்த வீட்டிலிருந்த மற்றுமொரு நபர் தங்காலை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இந்நிலையில் உயிரிழந்தவரின் மகனை பொலிஸ் தடுப்பு காவலில் வைத்து விசாரணை செய்யுமாறு தங்காலை நீதவான் நீதிமன்றம் நேற்று (26) அனுமதி வழங்கியுள்ளது.
போதைப்பொருட்கள் லொறியின் சாரதி
குறித்த வீட்டிற்கு அருகில் இருந்து போதைப்பொருட்கள் அடங்கிய மூன்று லொறிகள் கைப்பற்றப்பட்டன. 245 கிலோ கிராம் ஐஸ் மற்றும் 380 கிலோ கிராம் ஹெரோயின் உள்ளிட்ட போதைப்பொருட்களே இவ்வாறு கைப்பற்றப்பட்டுள்ளது.
அத்துடன் 5 பிஸ்டல் ரக துப்பாக்கிகள் மற்றும் ஒரு ரி - 56 ரக துப்பாக்கிளும் கைப்பற்றப்பட்டுள்ளன. அதன்படி, உயிரிழந்தவரின் மகனை ஒக்டோபர் மாதம் 01 ஆம் திகதி வரை பொலிஸ் தடுப்பு காவலில் வைத்து விசாரணை செய்யுமாறு நீதவான் அனுமதி வழங்கியுள்ளார்.
வைத்தியசாலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தவர் போதைப்பொருட்கள் அடங்கிய லொறியின் சாரதி என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
அதேசமயம் இந்த சம்பவம் தொடர்பில் இதற்கு முன்னர் 06 பேர் கைதுசெய்யப்பட்டுள்ள நிலையில் அவர்கள் செப்டெம்பர் 29 ஆம் திகதி வரை பொலிஸ் தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.