வெளிநாட்டிலிருந்து வந்த தமிழர் பகுதி இளைஞன் அதிரடி கைது ; அதிகாலையில் பரபரப்பை கிளப்பிய சம்பவம்
எட்டு கோடியே 66 இலட்சத்து 40 ஆயிரம் ரூபாய் பெறுமதியான 'குஷ்' ரக போதைப்பொருள் தொகையுடன் இருவரை விமான நிலைய பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட இருவரில் ஒருவர் 35 வயதுடைய நெடுங்கேணியைச் சேர்ந்தவர் என்றும் மற்றைய நபர் 46 வயதுடைய கண்டிப் பிரதேசத்தைச் சேர்ந்த வர்த்தகர் எனவும் தெரியவந்துள்ளது.

சந்தேகநபர்கள் இருவரும் இந்தப் போதைப்பொருள் தொகையை தாய்லாந்தில் விலைக்கு வாங்கி, மலேசியாவின் கோலாலம்பூர் நகருக்கு வந்துள்ளதுடன், அங்கிருந்து மலேசிய விமான சேவைக்குச் சொந்தமான எம்.எச். 179 இலக்க விமானம் மூலம் இன்று (16) அதிகாலை 12 மணிக்கு கட்டுநாயக்க விமான நிலையத்தை அடைந்துள்ளனர்.
அவர்கள் கொண்டு வந்த இரண்டு பயணப் பொதிகளில் இருந்த மதுபான போத்தல்கள் பொதி செய்யப்பட்டிருந்த நான்கு பெட்டிகளில் இருந்து போத்தல்கள் அகற்றப்பட்டு, அதற்குப் பதிலாக இந்த 'குஷ்' ரக போதைப்பொருள் மறைத்து வைக்கப்பட்டிருந்தமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
அந்தப் போதைப்பொருள் தொகை நான்கு பக்கெட்டுகளில் பொதி செய்யப்பட்டிருந்ததுடன், அதன் மொத்த எடை 8 கிலோகிராம் 664 கிராம்கள் ஆகும்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் இருவரையும் இன்று (16) நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தி தடுப்புக் காவல் கட்டளைகளைப் பெற்று, இது தொடர்பாக மேலதிக விசாரணைகளை மேற்கொள்ளத் திட்டமிடப்பட்டுள்ளது.