வடக்கு மக்களின் நிராகரிப்பால் 4ஆசனங்களை இழந்த தமிழரசுகட்சி
நடைபெற்று முடிவடைந்துள்ள பாராளுமன்ற தேர்தலில் 257813 வாக்குகளையே பெற்று 8 ஆசனங்களை பெற்ற நிலையில் கடந்த 2020ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் தமிழரசு கட்சி 327168வாக்குகளைப் பெற்று 10ஆசனங்களை பெற்றிருந்த தமிழரசுகட்சி கடந்த முறையை விட இம்முறை இரு ஆசனங்களை தமிழரசுகட்சி இழந்துள்ளது.
இலங்கை தமிழரசு கட்சி வடக்கு, கிழக்கு மாகாணங்களில் உள்ள அனைத்து தேர்தல் மாவட்டங்களிலும் போட்டியிருந்தது. அவ்;வகையில் யாழ்ப்பாணம், வன்னி, திருகோணமலை, அம்பாறை மாவட்டங்களில் ஒவ்வொரு ஆசனங்களைப் பெற்றுள்ளது.
மட்டக்களப்பு மாவட்டத்தில் மூன்று ஆசனங்களை பெற்று தமிழரசு கட்சிக்கு மொத்தமாக ஏழு ஆசனங்களுடன் ஒரு தேசிய பட்டியல் ஆசனமுமாக எட்டு ஆசனங்கள் கிடைக்கப்பெற்றுள்ளன.
இதனடிப்படையில் இலங்கை பாராளுமன்றத்தில் பெரும்பான்மை ஆசனங்களைப் பெற்ற மூன்றாவது கட்சியாக இலங்கை தமிழரசுகட்சி தெரிவு செய்யப்பட்டுள்ளது.
இதேவேளை இலங்கையில் உள்ள அனைத்து தேர்தல் மாவட்டங்களிலும் ஐக்கிய மக்கள் சக்தி வெற்றி பெற்றுள்ள நிலையில், மட்டக்களப்பு மாவட்டத்தில் மாத்திரம் தமிழரசுகட்சி தெரிவு செய்யப்பட்டுள்ளமை வரலாற்று பதிவாகும்.
கடந்த 2020ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் தமிழரசு கட்சி 327168வாக்குகளைப் பெற்றிருந்தது. இம்முறைத் தேர்தலில் 257813 வாக்குகளையே பெற்றுள்ளது. அவ்வகையில் 69355 வாக்குச்சரிவுகளை எதிர்கொண்டுள்ளது.
இதனடிப்படையில் 2020இல் 9ஆசனங்களுடன் தேசியப்பட்டியல் ஆசனமொன்றுமாக 10ஆசனங்களை பெற்றிருந்த தமிழரசுகட்சி இம்முறை 7ஆசனங்களுடன் தேசியபட்டியல் ஆசனமொன்றுமாக எட்டு ஆசனங்களைப் பெற்றுள்ளது.
அவ்வகையில் கடந்த முறையை விட இம்முறை இரு ஆசனங்களை தமிழரசுகட்சி இழந்துள்ளது. கடந்த காலங்களில் பல கட்சிகள் இணைந்து தமிழ்தேசிய கூட்டமைப்பாக தேர்தலில் போட்டியிருந்தது. இம்முறை தமிழரசுகட்சியாக மட்டுமே தேர்தலில் போட்டியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. 2020 தேர்தலில் அதிகூடிய வாக்குகளை யாழ்ப்பாண மாவட்டத்தில் தமிழரசுக்கட்சி பெற்றுக்கொண்டு 3ஆசனங்களைப் பெற்றிருந்தது.
இம்முறை இரண்டாவது கட்சியாகவே குறித்த மாவட்டத்தில் வாக்குகளைப் பெற்று ஓர் ஆசனத்தினை மட்டும் பெற்றுக்கொண்டுள்ளது. இதனடிப்படையில் யாழ்ப்பாணமாவட்டத்தில் 2ஆசனங்களை இழந்துள்ளது. அதேபோன்று 2020இல் வன்னி மாவட்டத்தில் அதிகூடிய வாக்குகளைப்பெற்று மூன்று ஆசனங்களைப் பெற்றிருந்தது.
இம்முறை மூன்றாம் நிலை வாக்குகளைப்பெற்று ஓர் ஆசனத்தினையே பெற்றுள்ளது. இதனடிப்படையில் இரு ஆசனங்களை இங்கும் இழந்துள்ளது. மட்டக்களப்பு மாவட்டத்தில் 2020இல் அதிகூடிய வாக்குகளைப் பெற்று இரு ஆசனங்களைப் பெற்றுக்கொண்டது.
இம்முறை மாவட்டத்தில் அதிகூடிய வாக்குகளைப் பெற்று மூன்று ஆசனங்களைப் பெற்றுள்ளது. இதனடிப்படையில் ஓர் ஆசனம் மேலதிகமாக இம்முறை கிடைக்கப்பெற்றுள்ளது. திருகோணமலை மாவட்டத்தில் 2020இல் ஓர் ஆசனத்தினைப் பெற்றுக்கொண்ட தமிழரசுகட்சி இம்முறையும் அவ்வாசனத்தினை தக்க வைத்துள்ளது.
கடந்த வருடம் திகாமடுல்ல மாவட்டத்தில் எந்தவொரு ஆசனத்தினையும் பெற்றுக்கொள்ளாத தமிழரசுக்கட்சி இம்முறை ஓர் ஆசனத்தினைப் பெற்றுள்ளது. இதனடிப்படையில் 2020இல் கிழக்கு மாகாணத்தில் தமிழரசுகட்சிக்கு மூன்று ஆசனங்களே கிடைக்கப்பெற்றிருந்தன.
ஆனால் இம்முறை ஐந்து ஆசனங்களைப் பெற்றுள்ளன. வடக்கு மாகாணத்தில் ஆறு ஆசனங்கள் 2020இல் கிடைக்கப்பெற்றன. ஆனால் இம்முறை இரு ஆசனங்களே கிடைக்கப்பெற்றுள்ளன. அவ்வகையில் வடக்கு மாகாணத்தில் 4ஆசனங்கள் இல்லாமல் போயிருக்கின்றன.
இதன்மூலம் வடக்கு மாகாணத்தில் தமிழரசு கட்சி தோல்வியை தழுவியுள்ளமை புலனாகின்றது. வடக்கு மாகாணத்தில் கடந்த காலங்களில் வருகைதந்த ஆறு ஆசனங்களும் இம்முறையும் கிடைத்திருந்தால் தேசிய பட்டியல் உட்பட 12ஆசனங்களை தமிழரசுகட்சி பெற்றிருக்கும்.