நாளை யாழில் தமிழ் கட்சி தலைவர்கள் முக்கிய கலந்துரையாடல்
13ஆம் திருத்தச் சட்டத்தை முற்றுமுழுதாக அது ஆரம்ப கட்டத்தில் அமுல்படுத்தப்பட்ட நிலையிலேயே நடைமுறைப்படுத்துவதற்கு இந்திய அரசாங்கத்தை ஒருமித்த நிலைப்பாட்டில் கோருவதற்கான கலந்துரையாடல் நாளை யாழில் இடம்பெறவுள்ளது.
இக்கலந்துரையாடல் நாளை காலை பத்து மணி தொடக்கம் யாழ்ப்பாணம் திண்ணை ஹோட்டலில் ஏற்கனவே தீர்மானிக்க பட்டதன் பிரகாரம் நடைபெற உள்ளதாக ரெலோவின் பேச்சாளர் சுரேந்திரன் தெரிவித்துள்ளார்.
இக்கூட்டத்தில் தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளர் நாயகம் நீதியரசர் சி வி விக்னேஸ்வரன் தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் தலைவர் செல்வம் அடைக்கலநாதன் ஜனநாய மக்கள் விடுதலை முன்னணியின்( புளட்) தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தன் தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் சிறீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவுப் ஹக்கீம் ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தமிழ் தேசிய கட்சியின் தலைவர் ஸ்ரீகாந்தா ஆகியோர் கலந்து கொள்ளவுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதேவேளை இந்த கூட்டத்தில் இலங்கை தமிழ் அரசு கட்சி பங்கேற்பதில்லையென முடிவு செய்துள்ளதாகவும் கூறப்படுகின்றது.
கோட்டாபாய அரசுடன் பேச்சுவார்த்தையென்ற பெயரில், இலங்கை தமிழ் அரசு கட்சி உறவாடலை ஆரம்பித்துள்ளதாக கருதப்படும் நிலையில், 13வது திருத்தத்தை ஒரே குரலில் வலியுறுத்தும் சந்திப்பை இலங்கை தமிழ் அரசு கட்சி தவிர்த்துள்ளதாக கூறப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.