இலங்கையில் இருந்து சென்றவர்களின் தாகம் தணித்த தமிழக பொலிஸார்! (Photos)
இலங்கையிலிருந்து ராமேஸ்வரம் சென்ற 5 சிறுவர்கள் உட்பட 8 நபர்களை வரவேற்று தமிழக மெரைன் காவல்துறையினர் தாகம் தீர்த்த புகைப்படங்கள் வெளியாகியுள்ளன.
இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியை அடுத்து பலர் தமிழ் நாட்டுக்கு தஞ்சம் தேடி செல்கின்றனர். அந்தவகையில் ராமேசுவரம் தனுஷ்கோடி அரிச்சல் முனை கடல் பகுதிக்கு சட்டவிரோதமாக 8 பேர் சென்றுள்ளனர்.
இந்நிலையில், தனுஷ்கோடி பொலிஸார் அரிச்சல்முனை கடல் பகுதியில் இருந்த சிறுவர்கள், பெண்கள் உள்பட எட்டு பேரை மீட்டு மண்டபம் தமிழக கடலோர காவல் படை பொலிஸாரிடம் ஒப்படைத்தனர்.
தஞ்சம்தேடி வந்தவர்கள்
அதன் பின்னர் பொலிஸார் அவர்களை மண்டபம் காவல் நிலையத்திற்கு அழைத்து சென்றனர். அங்கு அவர்களிடம் விசாரணை மேற்கொண்டதில் , தஞ்சம்தேடி வந்தவர்கள் அவர்கள் மன்னார் பகுதியை சேர்ந்த ராமச்சந்திரன் மகன் சசிகுமார் (வயது 30), இவரது மகன் மோஹித் (7), மகள் சுபிஸ்கா(9), யாழ்பாணம் பகுதியை சேர்ந்த வசந்தகுமார் மனைவி ஜெயந்தினி (30), மகள் இனியா (10), மகன்கள் ஹரி ஹரன்(9), தனுசன் (4) மற்றும் மன்னார் பகுதியை சேர்ந்த தேவராஜ் மனைவி இந்துமதி(65) என தெரியவந்தது.
பொருளாதார நெருக்கடி
மேற்கொண்டு நடத்திய விசாரணையில் இவர்கள் நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியால் பிழைப்பதற்கு வழியில்லாமல் தவித்து வந்ததாகவும், தலா ஒரு இலட்சம் கொடுத்து கள்ளத்தோணி மூலம் தலைமன்னார் கடல் பகுதிக்கு வந்ததாகவும் அவர்கள் தெரிவித்துள்ளதாக அந்த தகவல்கள் கூறுகின்றன.