தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் ; தவெகவுக்கு விசில் சின்னம்
தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் வரும் ஏப்ரல் அல்லது மே மாதத்தில் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதை முன்னிட்டு, அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வருகின்றன.
சட்டப்பேரவைத் தேர்தலில் முதன்முறையாக போட்டியிட உள்ள நடிகர் விஜய் இன் தமிழக வெற்றிக் கழகம் சார்பில், சின்னம் ஒதுக்கீடு செய்யக் கோரி இந்திய தேர்தல் ஆணையத்தில் வேண்டுகோள் வைக்கப்பட்டிருந்தது.

ஒரே பொது சின்னமாக விசில் சின்னம்
அதன் அடிப்படையில், அக்கட்சிக்கு விசில் சின்னம் ஒதுக்கப்படுவதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. தமிழகத்தின் 234 சட்டப்பேரவைத் தொகுதிக்கும் ஒரே பொது சின்னமாக விசில் சின்னத்தை தேர்தல் ஆணையம் ஒதுக்கியுள்ளது.
அதேநேரத்தில், அங்கீகாரம் பெறாத, பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சி என்பதால், இந்த சின்னம் 2026 சட்டப்பேரவைத் தேர்தலுக்கு மட்டுமே வழங்கப்பட்டுள்ளது.
சின்னம் ஒதுக்கீடு குறித்து கருத்து தெரிவித்துள்ள தவெகவின் தகவல் தொழில்நுட்பம் மற்றும் சமூக ஊடகப் பிரிவின் துணைப் பொதுச் செயலாளர் சி.டி.ஆர். நிர்மல் குமார்,
‘‘தமிழக வெற்றிக் கழகம் சார்பில் இந்திய தேர்தல் ஆணையத்திடம் சின்னம் கேட்டு விண்ணப்பத்திருந்தோம். விண்ணப்ப படிவித்தில் 10 சின்னங்களை பரிந்துரைத்திருந்தோம். முதல் சின்னமாக விசில் சின்னத்தை தலைவர் விஜய் கேட்டிருந்தார்.
எங்கள் தலைவருக்கு பிடித்த விசில் சின்னமே ஒதுக்கப்பட்டுள்ளது. இது எங்கள் அனைவருக்கும் ஒரு மகிழ்ச்சியான தருணம் எனக் குறிப்பிட்டுள்ளார்.
இதேபோல், கமல் ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு டார்ச்லைட் சின்னம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளதுடன் டார்ச்லைட் சின்னமும் 234 தொகுதிகளுக்கும் பொது சின்னமாக ஒதுக்கப்பட்டுள்ளது.