சூரியனுக்கு நன்றி செலுத்தும் தமிழர் பண்டிகை ; இனிய தைத்திருநாள் வாழ்த்துகள்
தமிழர் வாழ்வியல் வரலாற்றில் உழவுக்கும் இயற்கைக்கும் அளவற்ற மரியாதை செலுத்தும் திருநாளாக தைப்பொங்கல் பண்டிகை கொண்டாடப்படுகிறது.
மார்கழி மாதத்தின் இறுதி நாளிலும் தை மாதத்தின் முதல்நாளில் உதயமாகும் இந்தப் பண்டிகை புதிய ஆரம்பங்களுக்கும் நம்பிக்கையின் விதைகளுக்கும் அடையாளமாக விளங்குகிறது.
தை பிறந்தால் வழி பிறக்கும் எனும் சான்றோர் கூற்றுக்கு அமைய, தைத்திருநாளின் மகத்துவமும் அமைந்திருக்கிறது. சூரியன் தெற்கிலிருந்து வடக்கு நோக்கிப் பயணிக்கும் உத்தராயண காலத்தின் ஆரம்பமாக தைப்பொங்கல் கருதப்படுகிறது.
உயிர்களின் வாழ்விற்கு ஆதாரமான சூரிய தேவனுக்கு நன்றி செலுத்தும் நாளே இந்தத் திருநாள். அறுவடை நிறைவடைந்த மகிழ்ச்சியில், புதுப்பானையில் புத்தரிசியில் பொங்கலிட்டு படைப்பது தமிழரின் பாரம்பரிய பண்பாட்டை அழகாக வெளிப்படுத்துகிறது.
தைப்பொங்கல் பண்டிகை நான்கு நாட்கள் கொண்டாடப்படுகிறது. போகி, தைப்பொங்கல், மாட்டுப்பொங்கல், காணும் பொங்கல் என ஒவ்வொரு நாளும் தனித்தன்மை பெற்றது.

போகி தினத்தில் பழையவற்றை அகற்றி புதுமையை வரவேற்கின்றோம். தைப்பொங்கல் தினத்தில் சூரியனை வழிபட்டு நன்றியை வெளிப்படுத்துகிறோம். மாட்டுப்பொங்கல் தினத்தில் உழவுக்கு துணை நிற்கும் மாடுகளுக்கு மரியாதை செலுத்துகின்றோம்.
காணும் பொங்கல் தினத்தில், உறவினர்களைச் சந்தித்து, நட்பையும் பாசத்தையும் வலுப்படுத்துகின்றோம். கிராமங்களிலும் நகரங்களிலும் ஒரே மனதுடன் கொண்டாடப்படும் இந்தப் பண்டிகை, தமிழரின் ஒற்றுமையையும் பண்பாட்டுப் பெருமையையும் உலகிற்கு எடுத்துரைக்கிறது.
தைப்பொங்கல் என்பது வெறும் பண்டிகை மட்டுமல்ல, உழவரின் உழைப்பை மதித்து, இயற்கைக்கு நன்றி கூறி, மனித உறவுகளை வலுப்படுத்தும் இந்தத் திருநாள், தலைமுறைகள் கடந்தும் தமிழரின் சிறப்பை நிலைத்து நிற்கும் செய்யும் வரலாற்று நாள் ஆகும்.