டெங்கு காய்ச்சலால் அவதியா? இந்த உணவுகளை எடுத்துக்கோங்க
டெங்கு காய்ச்சலால் ஏராளமானோர் பாதிக்கப்பட்டு வருகின்றனர். டெங்கு காய்ச்சலானது கொசுக்களின் மூலமாக பரவக்கூடியது.
அனைத்து பகுதிகளிலும் இந்த டெங்குவால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
டெங்கு காய்ச்சலுக்கு போதுமான சிகிச்சையைப் பெறாமல் விட்டுவிட்டால், அது தீவிரமாகி உயிரையே பறித்துவிடும்.
டெங்கு காய்ச்சலானது இரத்த சிவப்பணுக்களின் உற்பத்தியைக் குறைப்பதோடு, இரத்த சிவப்பணுக்களை வேகமாக அழிக்கவும் செய்யும்.
இதன் விளைவாக உடலின் அனைத்து உறுப்புகளுக்கும் ஆக்ஸிஜனை சுமந்து செல்லும் ஹீமோகுளோபின் என்னும் புரோட்டீன் மிகவும் குறைந்து, ஹீமோகுளோபின் குறைபாட்டை ஏற்படுத்தி, இரத்த சோகையை உண்டுபண்ணும்.
டெங்கு நோயாளிகளுக்கு இரத்த சோகை வந்துவிட்டால், அது நிலைமையை இன்னும் மோசமாக்கிவிடும்.
எனவே டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்கள் உடலில் ஹீமோகுளோபின் அளவு குறையாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.
அதற்கு ஒருசில உணவுகளை உட்கொள்ள வேண்டும். அப்படி உட்கொள்ளும் போது, இரத்த சிவப்பணுக்களின் அளவு குறையாமல் இருப்பதோடு விரைவில் டெங்குவில் இருந்து குணமாகவும் உதவி புரியும்.
இரும்புச்சத்துள்ள உணவுகள்
டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்கள் முதலில் இரும்புச்சத்து அதிகம் நிறைந்த பழங்கள் மற்றும் காய்கறிகளை உட்கொள்ள வேண்டும்.
இரும்புச்சத்தானது இரத்த சிவப்பணுக்களின் உற்பத்திக்கு தேவையான மிகவும் முக்கியமான சத்தாகும்.
இந்த இரும்புச்சத்து இறைச்சி, மீன், பீன்ஸ், கீரைகள், பருப்பு வகைகள், பேரிச்சம் பழம் போன்றவற்றில் அதிகமாக உள்ளன.
எனவே இந்த வகை உணவுகளை தினசரி உணவில் சேர்க்க வேண்டும்.
வைட்டமின் சி நிறைந்த உணவுகள்
வைட்டமின் சி அதிகம் நிறைந்த உணவுகளானது டெங்குவில் இருந்து விரைவில் விடுபட உதவி புரியும்.
ஏனெனில் இரும்புச்சத்து உறிஞ்சுவதற்கு வைட்டமின் சி உதவுகிறது.
வைட்டமின் சி நோயெதிர்ப்பு மண்டலத்தை வலுப்படுத்தவும் தொற்றில் இருந்து விரைவில் விடுபடவும் உதவி புரிகிறது.
ஆகவே வைட்டமின் சி நிறைந்த சிட்ரஸ் பழங்கள், கிவி, பெர்ரி பழங்கள், ப்ராக்கோலி, தக்காளி போன்றவற்றை அதிகம் உட்கொள்ள வேண்டும்.
ஃபோலேட் நிறைந்த உணவுகள்
ஃபோலேட் டெங்குவில் இருந்து சீக்கிரம் குணமாக உதவி புரியும்.
அதுவும் பி வைட்டமின் ஃபோலேட்டுகள் இரத்த சிவப்பணுக்கள் மற்றும் இரத்த வெள்ளையணுக்களின் உற்பத்திக்கு மிகவும் தேவையான சத்தாகும்.
கூடுதலாக ஃபோலேட் நோயெதிர்ப்பு மண்டலத்தை வலுப்படுத்தி, விரைவில் குணமாக உதவுகிறது. இந்த ஃபோலேட் சத்தானது கீரைகள், பீன்ஸ், பருப்பு வகைகளில் அதிகமாக காணப்படுகின்றன.
எனவே இந்த வகை உணவுகளையும் டெங்கு நோயாளிகள் உட்கொள்ள வேண்டும்.
புரோட்டீன் உணவுகள்
தசைகளின் வலிமைக்கும், வளர்ச்சிக்கும் புரோட்டீன் மிகவும் இன்றியமையாத சத்து என்பதை அனைவரும் அறிவோம்.
டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்படும் போது, தசை திசுக்கள் அதிகம் சேதமடைகிறது.
ஆகவே தசை திசுக்களில் ஏற்படும் காயங்களை சரிசெய்யவும், அதன் வலிமையை பராமரிக்கவும் புரோட்டீன் மிகவும் தேவை.
கூடுதலாக புரோட்டீன் நோயெதிர்ப்பு மண்டலத்தை வலுப்படுத்தவும் உதவி புரிகிறது.
ஆகவே இறைச்சி, கோழி, மீன், முட்டை, பால் பொருட்கள், பீன்ஸ், பருப்பு வகைகள், நட்ஸ் போன்ற புரோட்டீன் அதிகம் நிறைந்த உணவுகளை உட்கொண்டால் விரைவில் டெங்குவில் இருந்து குணமாகலாம்.