கொரோனா தொற்றுக்கான அறிகுறிகள் இவைதான்: குழந்தை நல வைத்தியர்
தற்போது உலகநாடு முழுவதும் வகையான வைரஸ் காய்ச்சல் பரவி வருகிறது.தற்போதுள்ள சூழலில் இருமல் , தடிமல் மற்றும் உடல் வலியுடன் இக் காய்ச்சல் வருமானால், நாம் அதை கொரோனா தொற்றுக்கான அறிகுறி என்றே கருத வேண்டும்.
இவ்வாறு கிழக்கு பல்கலைக்கழக மருத்துவ பீட சிரேஸ்ட விரிவுரையாளரும் மட்.போதனா வைத்தியசாலையின் விசேட குழந்தை நல வைத்திய நிபுணருமான டாக்டர் விஜி திருக்குமார் தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
இவ் அறிகுறி உள்ளவர்கள் தங்களை தாங்களே 10 – 14 நாட்கள் சுயதனிமைப்படுத்தலுக்குட்படுத்தி கூடுமானவரை வெளியில் செல்வதை தவிர்த்துக் கொள்ளவும். சத்தான உணவுகளையும் உடல்வலிக்கு பரசிட்டமோல் மருந்தினையும் எடுத்துக் கொள்ள வேண்டும்.
அதேவேளை வைத்தியருடைய ஆலோசனையை பெற்றுக்கொள்ள வேண்டும். நீரிழிவு நோயாளர்கள் ,உயர் குருதி அமுக்க நோயாளர்கள்இ இருதய நோயாளர்கள் , சிறுநீரக நோயாளர்கள் மற்றும் 50 வயதிற்க்கு மேற்பட்டவர்களுக்கு திடீர் மூச்சு திணறல் ஏற்படும் வாய்ப்புகள் அதிகமாக உள்ளது.
இச்சந்தர்ப்பத்தில் உடனடியாக அருகில் உள்ள வைத்தியசாலைக்குச் சென்று சிகிச்சையை பெற்றுக் கொள்ள வேண்டும். அதி தீவிர நோய் அறிகுறி அற்றவர்கள் அதாவது சுவாச சிரமம் இல்லாதவர்கள் வைத்திய ஆலோசனையைப் பெற்று வீட்டில் இருந்தே சிகிச்சையை பெற்றுக் கொள்ள முடியும்.
கூடுமானவரை வெளியில் செல்லும்போது முக்கவசத்தைப் பயன்படுத்தவும். தினமும் புளிப்பான பழங்கள் மற்றும் நீரை பருகுவதன் மூலம் எம்மை கொரோனா தொற்றில் இருந்து பாதுகாத்துக்கொள்ள முடியும்.