சிட்னியில் தாக்குதலை நடத்தியவர் இந்தியர்; வெளியான பகீர் தகவல்!
ஆஸ்திரேலியாவின் சிட்னியில் உள்ள போண்டி கடற்கரையில் துப்பாக்கிச் சூடு நடத்திய இருவரில் ஒருவரான 50 வயது சஜித் அக்ரம் ஓர் இந்தியர் என இந்திய அதிகாரிகள் தெரிவித்துள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
கடந்த ஞாயிற்றுக்கிழமை (டிச.14) மாலை சிட்னியில் உள்ள போண்டி கடற்கரையில் யூதர்களை குறிவைத்து இருவர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 16 யூதர்கள் உயிரிழந்ததுடன் இரண்டு போலீஸ் அதிகாரிகள், பெண்கள், குழந்தைகள் உள்பட பலர் காயமடைந்தனர்.

சஜித் அக்ரம் ஹைதராபாத்தைச் பூர்விகமாகக் கொண்டவர்
இந்த தாக்குதலை நடத்திய இருவரில் ஒருவரான சஜித் அக்ரம் (50), காவல் துறையினர் நடத்திய பதில் தாக்குதலில் உயிரிழந்தார். மற்றொரு நபரான நவீத் அக்ரம் (24) பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டில் பலத்த காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சஜித் அக்ரமின் மகன்தான் நவீத் அக்ரம் என்பது விசாரணையில் தெரிய வந்தது. இவர்களில் சஜித் அக்ரம் என்பவர் தெலங்கானா தலைநகர் ஹைதராபாத்தைச் பூர்விகமாகக் கொண்டவர் என கூறப்படுகின்றது.

1998-ல் மாணவர் விசாவில் ஆஸ்திரேலியா சென்ற சஜித் அக்ரம், அங்கு ஐரோப்பியர் ஒருவரை திருமணம் செய்துள்ளார். எனினும், இந்திய பாஸ்போர்ட்டையே அவர் பயன்படுத்தி வந்துள்ளார்.
இவரது மகனான நவீத் அக்ரம், ஆஸ்திரேலியாவில் பிறந்து அந்நாட்டு குடியுரிமையைக் கொண்டுள்ளார். சஜித் அக்ரம் ஓர் இந்தியர் என்றபோதிலும், அவர் 1998-க்குப் பிறகு இரண்டு மூன்று முறை மட்டுமே இந்தியா வந்துள்ளதாகக் கூறப்படுகிறது.
இரண்டு மூன்று முறை மட்டுமே இந்தியா
அவர் கடைசியாக 2022-ல் ஹைதராபாத் வந்துள்ளாராம். சஜித் அக்ரமின் நெருங்கிய உறவினர்கள் பலரும் ஹைதராபாத்தில் வசிக்கிறார்கள்.
அவரது மூத்த சகோதரர் ஒரு மருத்துவர் என்றும், மறைந்த அவரது தந்தை ஐக்கிய அரபு அமீரகத்தில் ராணுவத்தில் பணியாற்றி 1984-ல் ஓய்வு பெற்றவர் என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

சஜித் அக்ரம் குறித்த தகவல்களை திரட்ட ஆஸ்திரேலிய அதிகாரிகள், இந்திய அதிகாரிகளுடன் தொடர்பில் இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
சஜித் அக்ரம் தனது மகன் நவீத் அக்ரமுடன் கடந்த மாதம் பிலிப்பைன்ஸ் நாட்டுக்குச் சென்றதாகவும் கூறப்படுகின்றது. அதேவேளை முன்னதாக, சஜித் அக்ரம் பாகிஸ்தானைச் சேர்ந்தவர் என தகவல் வெளியாகி இருந்தமை குறிப்பிடத்தக்கது.