சிசிரிவி கமராக்களைத் திருடிய சந்தேக நபர்கள் சிசிரிவியில் சிக்கினர்!
இரத்தினபுரி - பலாங்கொடை பிரதேச தேயிலைத் தோட்ட கட்டடம் ஒன்றில் பொருத்தப்பட்டிருந்த சிசிரிவி கமராக்களைத் திருடிய சந்தேக நபர்களை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
இந்த கைது நடவடிக்கை நேற்று முன்தினம் (01-07-2023) இடம்பெற்றுள்ளது.
பலாங்கொடை எல்லவத்த பிரதேச தேயிலைத் தோட்டக் கட்டடத்தில் பொருத்தப்பட்டிருந்த சிசிரிவி கமராக்கள் திருடப்பட்டுள்ளமை தொடர்பில் பலாங்கொடை பொலிஸ் நிலையத்தில் தோட்ட நிர்வாகம் முறைப்பாடு செய்திருந்தது.
குறித்த முறைப்பாட்டை அடுத்து இங்கு பொருத்தப்பட்டிருந்த சிசிரிவி கமராவின் தொழில்நுட்பக் கருவி சோதனை செய்யப்பட்டபோது அதில் கமராவை திருடிச் செல்பவர்களின் வீடியோ படம் பதிவாகியுள்ளது.
விசாரணைகளை நடத்திய பொலிஸார் பலாங்கொடை வெலேகும்புர பிரதேசத்தைச் சேர்ந்த இருவரே இவற்றைத் திருடியுள்ளதாக உறுதிப்படுத்திக் கொண்டதையடுத்து இவர்கள் சிசிரிவி கமராக்களை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கச் சென்ற வேளையில் இருவரும் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
இதனையடுத்து பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.