தாய் தலையில் துப்பாக்கி... யுவதியை கடத்திச் சென்ற சந்தேக நபர்களுக்கு நேர்ந்த கதி!
கேகாலை, தெரணியகல பகுதியில் உள்ள வீடு ஒன்றிற்குள் அத்துமீறி புகுந்து தாயின் தலையில் துப்பாக்கி வைத்து மிரட்டி யுவதியை கடத்திச் சென்றதாக கூறப்படும் 2 சந்தேக நபர்களை பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் கேகாலை, தெஹியோவிட்ட மற்றும் கதன்கம ஆகிய பகுதிகளில் வசிக்கும் 17 மற்றும் 19 வயதுடையவர்கள் என பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
கடத்திச் செல்லப்பட்ட யுவதி கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களில் ஒருவருடன் நீண்ட காலமாக காதல் உறவில் ஈடுபட்டு வந்துள்ளார்.
இதனையறிந்து கொண்ட தாயார், யுவதியை சில நாட்களுக்கு உறவினர் வீட்டில் தங்க வைத்துள்ளார்.
பின்னர் இந்த யுவதி கடந்த 12 ஆம் திகதி, தனது தாயாரின் வீட்டிற்கு மீண்டும் சென்றிருந்தபோது, சந்தேகநபர்கள் இருவரும் யுவதியின் வீட்டிற்குள் அத்துமீறி புகுந்து தாயின் தலையில் துப்பாக்கியை வைத்து மிரட்டி யுவதியை கடத்திச் சென்றுள்ளனர்.
இதனையடுத்து, கடத்திச் செல்லப்பட்ட யுவதியின் தாயார் இது குறித்து தெரணியகல பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு அளித்துள்ளார்.
பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் சந்தேக நபர்கள் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை தெரணியகல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.