இரட்டைக் கொலையுடன் தொடர்புடைய சந்தேகநபர் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழப்பு
காலி மீட்டியாகொடை - தம்பஹிட்டிய பகுதியில் உள்ள உணவகம் ஒன்றிற்கு அருகில் நேற்றிரவு நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த நபர் இரட்டைக் கொலை ஒன்றுடன் தொடர்புடையவர் என விசாரணையில் தெரியவந்துள்ளது.
இதன்படி, அவர் கடந்த 2015 ஆம் ஆண்டு இடம்பெற்ற இரட்டைக் கொலையுடன் தொடர்புடைய சந்தேகநபர் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
மீட்டியாகொடை - மானம்பிட்ட தம்பஹிட்டிய பகுதியிலுள்ள உணவகம் ஒன்றிற்கு அருகில் இரண்டு உந்துருளிகளில் பயணித்த குழுவொன்றினால் நேற்றிரவு துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது.
தனிப்பட்ட தகராறு காரணமாக இந்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. துப்பாக்கிச் சூட்டுக்கு ரீ 56 ரக துப்பாக்கி பயன்படுத்தப்பட்டுள்ளதுடன், துப்பாக்கிதாரிகள் தப்பிச் சென்றுள்ளதாகவும் காவல்துறையினர் குறிப்பிட்டுள்ளனர்.
துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த குறித்த இருவரும் பலபிட்டிய ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அதில் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மீட்டியாகொடை பகுதியைச் சேர்ந்த 47 வயதுடையவரே சம்பவத்தில் உயிரிழந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, இந்த வருடம் இதுவரையான காலப்பகுதியில் மாத்திரம் 40 துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள் பதிவாகியுள்ளதுடன், இதன்போது 28 பேர் உயிரிழந்ததாகவும் காவல்துறையினர் குறிப்பிட்டுள்ளனர்.