5 கோடி பெறுமதியான போதைப்பொருளுடன் சந்தேகநபர் கைது
மினுவாங்கொடை, அம்பகஹவத்தை பகுதியில் விசேட அதிரடிப்படையினர் மேற்கொண்ட திடீர் சோதனையின் போது, 5 கோடி ரூபாவுக்கும் அதிக பெறுமதியான 12 கிலோகிராம் 'ஹாஷிஷ்' போதைப்பொருளுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கொனஹேன முகாமின் விசேட அதிரடிப்படை உளவுப் பிரிவின் அதிகாரிகளுக்குக் கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில் இச்சோதனை நடத்தப்பட்டது.

மினுவாங்கொடை பகுதியில் மோட்டார் சைக்கிளில் பயணித்துக் கொண்டிருந்த போது சந்தேகநபரை வழிமறித்துச் சோதனையிட்டதில், அவரிடமிருந்து 06 கிலோகிராம் ஹாஷிஷ் போதைப்பொருள் முதலில் கைப்பற்றப்பட்டது.
சந்தேகநபரிடம் நடத்திய தொடர் விசாரணைகளை அடுத்து, அவரது வீட்டில் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் மேலும் 06 கிலோகிராம் ஹாஷிஷ் கண்டெடுக்கப்பட்டது.
கைப்பற்றப்பட்ட 12 கிலோகிராம் ஹாஷிஷ் போதைப்பொருளின் சந்தைப் பெறுமதி 5 கோடி ரூபாவுக்கும் அதிகமென விசேட அதிரடிப்படையினர் தெரிவித்துள்ளனர். மேலதிக விசாரணைகளுக்காகவும் சட்ட நடவடிக்கைகளுக்காகவும் சந்தேகநபர் மினுவாங்கொடை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.