சலூன் கடைக்குள் நுழைந்து உரிமையாளரைத் தாக்கிப் பணம் பறிப்பு
மெதவச்சியாவில், சலூன் கடை ஒன்றிற்குள் நுழைந்து உரிமையாளரைத் தாக்கிப் பணம் பறிக்க முயன்ற நபர் ஒருவரின் காணொளி சமூக ஊடகங்களில் பரவியதைத் தொடர்ந்து, அப்பகுதியைச் சேர்ந்த 29 வயதுடைய நபர் ஒருவரைப் பொலிஸார் கைது செய்துள்ளனர்.
இச்சம்பவம் குறித்து ஜூன் 10-ஆம் திகதி மெதவச்சியா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டது. ஜூன் 9-ஆம் திகதி இடம்பெற்ற இத்தாக்குதல் தொடர்பான காணொளி இணையத்தில் பரவலாகப் பகிரப்பட்டிருந்தது.

சந்தேகநபரைக் கைது செய்த பொலிஸார்
விசாரணைகளைத் தொடர்ந்து, நேற்று மாலை சந்தேகநபரைக் கைது செய்த பொலிஸார், தாக்குதலுக்குப் பயன்படுத்தப்பட்டதாகக் கூறப்படும் கூர்மையான ஆயுதத்தையும் கைப்பற்றினர்.
இத்தாக்குதல் பணம் பறிக்கும் முயற்சியுடன் தொடர்புடையதல்ல என்றும், சந்தேகநபருக்கும் கடை உரிமையாளருக்கும் இடையே நீண்டகாலமாக நிலவி வந்த தகராறே இதற்குக் காரணம் என்றும் விசாரணையில் தெரியவந்துள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர்
. சந்தேகநபர் இன்று மெதவச்சியா நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.