வெலே சுதா மரண தண்டனையை உறுதி செய்தது உயர் நீதிமன்றம்
பிரபல போதைப்பொருள் கடத்தல்காரரான ‘வெலே சுதா’ என அறியப்படும் கம்பொல விதானகே சமந்த குமாரவினால் தாக்கல் செய்யப்பட்டிருந்த விசேட மேல்முறையீட்டு விண்ணப்பத்தை உயர் நீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்துள்ளது.
இதன் மூலம் கொழும்பு மேல் நீதிமன்றத்தினால் அவருக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனை உறுதி செய்யப்பட்டுள்ளது.
நீதியரசர்களான மஹிந்த சமயவர்தன, அர்ஜுன ஒபயசேகர மற்றும் சோபித்த ராஜகருணா ஆகிய மூவர் அடங்கிய உயர் நீதிமன்ற நீதியரசர்கள் ஆயமே, கீழ் நீதிமன்றங்களின் தீர்ப்புகளுக்கு எதிராக விசேட மேல்முறையீட்டு அனுமதியை வழங்க மறுத்து இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளது.
இம்மேல்முறையீட்டு மனுத் தள்ளுபடி செய்யப்பட்டதைத் தொடர்ந்து, சமந்த குமாரவுக்கு விதிக்கப்பட்ட குற்றச்சாட்டும் மரண தண்டனையும் எவ்வித மாற்றமுமின்றி நடைமுறையில் இருக்கும்.
கடந்த 2008 ஆம் ஆண்டு கல்கிஸ்ஸ (Mount Lavinia) பகுதியில் 7.05 கிராம் ஹெரோயின் போதைப்பொருளைக் கைவசம் வைத்திருந்தமை மற்றும் கடத்தியமை ஆகிய குற்றச்சாட்டுகளின் கீழ், சமந்த குமார குற்றவாளியாகக் காணப்பட்டார். இதனையடுத்து, 2015 ஆம் ஆண்டு ஒக்டோபர் 14 ஆம் திகதி கொழும்பு மேல் நீதிமன்றத்தினால் அவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது.
கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதியாகக் கடமையாற்றிய தற்போதைய உயர் நீதிமன்ற நீதியரசர் பிரீத்தி பத்மன் சூரசேனவினால் இந்தத் தீர்ப்பு வழங்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.