கிளிநொச்சி கரைச்சி தவிசாளரை நீக்க சுமந்திரன் திட்டம்
கிளிநொச்சி கரைச்சி பிரதேச சபையின் தவிசாளர் அருணாசலம் வேளமாலிகிதனை கட்சியில் இருந்து நீக்க இலங்கைத் தமிழரசுக் கட்சி பரிசீலனை செய்துள்ளது.
கட்சியில் இருந்து நீக்கப்பட்ட ஜீவராசா என்பவர் அடங்கலாக வடக்கு மாகாண ஆளுநரைச் சந்தித்தமை தொடர்பில் ஒரு வார காலத்தினுள் விளக்கம் கோரி கட்சியின் பொதுச்செயலாளர் எம்.ஏ.சுமந்திரனால் வேளமாலிகிதனுக்குக் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.
அந்த விளக்கம் கோரல் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
“கடந்த 19.06.2025 அன்று தாங்களும் இன்னும் மூவரும் வடக்கு மாகாண ஆளுநரைச் சந்தித்து உரையாடியதாக அறியக் கிடைத்தது.
அந்த மூவரில் ஒருவர் அண்மையில் கட்சியில் இருந்து விலக்கப்பட்ட ஜீவராசா என்றும் அறியக்கிடைத்தது. இவர் கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் எமது கட்சிக்கு எதிராகச் சுயேட்சையாகப் போட்டியிட்டவர்.
கடந்த உள்ளூராட்சி சபைத் தேர்தலிலும் எமக்கு எதிராகப் போட்டியிட வேட்புமனுத் தாக்கல் செய்தவர் என்பதும் நீங்கள் நன்கு அறிந்த விடயங்கள்.
வெளிப்படையாகவே கட்சிக்கு எதிராகச் செயற்படும் ஒருவர் உத்தியோகபூர்வ சந்திப்பு ஒன்றில் உங்களுடன் சேர்ந்து கலந்துகொள்வதும் அது பகிரங்க செய்தியாக வெளிவருவதும் கட்சி நலனை வெகுவாகப் பாதிக்கும் என்பது தாங்கள் அறிந்திருக்க வேண்டியதொன்று.
கடந்த உள்ளூராட்சி சபைத் தேர்தலில் தங்களுக்குப் போட்டியிடச் சந்தர்ப்பம் வழங்க முன்னர் கடந்த ஜனாதிபதித் தேர்தலில் கட்சியின் தீர்மானத்துக்கு மாறாகச் செயற்பட்டமைக்குத் தாங்கள் மன்னிப்பு கோரியதோடு எதிர்காலத்தில் இப்படியான குற்றத்தைச் செய்தால் எவ்வித விசாரணையும் இன்றி கட்சியில் இருந்தும் கட்சி சார்பில் வகிக்கும் பதவியில் இருந்தும் உடனடியாக நீக்கப்படுவதற்கு உங்களது ஒப்புதலை வழங்கியுள்ளீர்கள்.
ஆகவே ஜீவராஜா போன்ற ஒருவரை ஆளுநரைச் சந்திக்கச் சென்ற உத்தியோகபூர்வ குழுவில் சேர்த்துக்கொண்ட குற்றத்துக்காக நீங்கள் ஏன் கட்சியில் இருந்து நீக்கப்படக்கூடாது என்பதற்குக் காரணம் காட்டி ஒரு வார காலத்துக்குள் எழுத்து மூலம் எனக்குப் பதில் அனுப்பி வைக்கப்பட வேண்டும்.
இல்லையெனில் அல்லது திருப்திகரமான பதில் அளிக்காவிட்டால் நீங்கள் கட்சியில் இருந்து உடனடியாக நீக்கப்படுவீர்கள், கட்சியில் உறுப்பினர்களை சேர்பதல்ல நீக்குவதுதான் பதில் செயலாளர் பதவியாச்சி எனவும் குறிப்பிட்டுள்ளார்.