பிரபல பாடசாலையில் மாணவனின் மோசமான செயல்!
மொனராகலையில் தணமல்வில கல்வி வலயத்திற்கு உட்பட்ட பாடசாலை ஒன்றில் கல்வி கற்கும் மாணவன் ஒருவன் பாடசாலைக்குள் வெளிநாட்டு சிகரட்டுகளை விற்பனை செய்வதாக கூறப்படுகின்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தணமல்வில கல்வி வலயத்திற்கு உட்பட்ட பாடசாலை ஒன்றில் 11 ஆம் வகுப்பில் கல்வி கற்கும் மாணவன் ஒருவன் ஏனைய மாணவர்களுக்கு வெளிநாட்டு சிகரட்டுகளை விற்பனை செய்வதாக அதே பாடசாலையில் கல்வி கற்கும் மாணவர்கள் சிலர் பாடசாலை அதிபரிடம் தெரிவித்துள்ளனர்.
100 ரூபாவிற்கு வாங்கி 200 ரூபாக்கு விற்பனை
இதனையடுத்து பாடசாலை அதிபர், சந்தேக நபரான மாணவனை அழைத்து சோதனையிட்டபோது மாணவனிடமிருந்து வெளிநாட்டு சிகரட்டுகள் கைப்பற்றப்பட்டுள்ளன.
இதனையடுத்து பாடசாலை அதிபர் இது தொடர்பில் தணமல்வில பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளார்.
இது தொடர்பில் பொலிஸாரால் நடத்தப்பட்ட விசாரணைகளில், சந்தேக நபரான மாணவன் சூரியவெவ பிரதேசத்தில் உள்ள கடை ஒன்றில் இருந்து இந்த வெளிநாட்டு சிகரட்டுகள் கொள்வனவு செய்துள்ளதாக தெரியவந்துள்ளது.
இதனையடுத்து, சூரியவெவ பிரதேசத்தில் உள்ள கடையின் உரிமையாளரிடம் நடத்தப்பட்ட விசாரணைகளில், கடை உரிமையாளர் சுங்கவரி செலுத்தாமல் சட்டவிரோதமாக நாட்டுக்கு கொண்டுவரப்பட்ட வெளிநாட்டு சிகரட்டுகளுடன் பல தடவைகள் கைதுசெய்யப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
கடை உரிமையாளர் சந்தேக நபரான மாணவனுக்கு 100 ரூபாய்க்கு சிகரட்டுகளை விற்பனை செய்துள்ள நிலையில் சந்தேக நபரான மாணவன் அதனை பாடசாலைக்குள் 200 ரூபாய்க்கு விற்பனை செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவம் தொடர்பில் கடையின் உரிமையாளர் கைதுசெய்யப்பட்டுள்லதுடன் மேலதிக விசாரணைகளை தணமல்வில பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.