வங்காள விரிகுடாவில் பலத்த காற்று ; மீனவர்களுக்கு எச்சரிக்கை
வங்காள விரிகுடாவின் ஆழ்கடல் பகுதிகளில் பயணிக்கும் நெடுநாள் மீன்பிடிப் படகுகளுக்கு பலத்த காற்று மற்றும் கடல் கொந்தளிப்பு தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இன்று (03) முற்பகல் 10.30 மணிக்கு வெளியிடப்பட்ட இந்த அறிவித்தல் அடுத்த 24 மணித்தியாலங்களுக்கு செல்லுபடியாகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

'முரசு' புயல் தற்போது இந்திய நிலப்பரப்புக்குள் பிரவேசித்துள்ளதுடன், தொடர்ந்து வடக்கு நோக்கி நகர்ந்து வடமேற்குத் திசையில் பயணிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இன்று முற்பகல் 11.30 மணியளவில் சாதாரண புயலாகவும், இரவு 11.30 மணியளவில் ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாகவும் படிப்படியாக வலுவிழக்கும் என திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
இதன் காரணமாக, குறித்த கடற்பகுதிகளில் காற்றின் வேகம் மணித்தியாலத்திற்கு 65 முதல் 75 கிலோமீற்றர் வரை அதிகரிக்கக்கூடும். அத்துடன், இடியுடன் கூடிய பலத்த மழையும் பெய்யக்கூடும் என்பதால் கடற்பரப்பு மிகவும் கொந்தளிப்பாகக் காணப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
எனவே, மீன்பிடி மற்றும் கடற்சார் சமூகத்தினர் மிகுந்த அவதானத்துடன் செயற்படுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். இதேவேளை, இந்தப் புயல் தொடர்பில் வெளியிடப்பட்ட இறுதி எச்சரிக்கை அறிவித்தல் இதுவெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.