வேட்பு மனுத்தாக்கலால் யாழில் பலத்த பாதுகாப்பு!
உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில் யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
வேட்புமனு தாக்கல் செய்ய வரும் அரசியல் கட்சிகள், சுயேட்சை குழுக்கள் பேரணியாகவோ பெருந்திரளாகவோ வருவதை தடுக்கும் வகையில் வீதியின் இருபுறமும் தடைகள் போடப்பட்டு பொலிசார் கண்காணிப்பு கடமையில் ஈடுபட்டுள்ளனர்.
உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்கான கட்டுப்பணத்தை வைப்பிலிடுவதற்கு வழங்கப்பட்ட கால அவகாசம் நேற்று மதியம் 12 மணியுடன் நிறைவடைந்தது.
அத்துடன் உள்ளூராட்சி சபை தேர்தல் தொடர்பான வேட்புமனுக்கள் இன்று நண்பகல் 12 மணிவரை ஏற்றுக்கொள்ளப்படவுள்ளன.
இந்நிலையில், மேலும் சில கட்சிகள் இன்று வேட்பு மனுத்தாக்கல் செய்துள்ளன. அந்தவகையில், இலங்கை சுதந்திர கட்சி அங்கஜன் இராமநாதன் தலைமையில் யாழ் மாவட்டத்திற்கான வேட்புமனுவை தாக்கல் செய்துள்ளது.
அதேபோல் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையிலான ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியும் வேட்புமனுத்தாக்கல் செய்துள்ளது.