வலுப்பெறும் மொன்தா புயல் ; இலங்கை மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
வங்கக்கடலில் உருவாகி நிலைகொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று அதிகாலை 2.30 மணியளவில் புயலாக வலுப்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மொன்தா புயல் நாளை காலை சூறாவளியாக வலுப்பெற்று, மாலையில் ஆந்திரப் பிரதேச கரையைக் கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

வளிமண்டலவியல் திணைக்களத்தின் அறிவுறுத்தல்
இதேவேளை வடக்கு, வடமத்திய, மேல், சபரகமுவ, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் இன்று மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுகளிலும், மேல், சபரகமுவ, மத்திய, தென், வடக்கு, வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும், திருகோணமலை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களிலும் மணிக்கு சுமார் 50-60 கிலோமீற்றர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும்.
இந்தநிலையில், காங்கேசன் துறையிலிருந்து திருகோணமலை வழியாக மட்டக்களப்பு வரையிலான கடற்கரைக்கு அப்பால் உள்ள ஆழமற்ற கடல் பகுதிகளில் கடற்றொழிலாளர்கள் கடலுக்குச் செல்வதை மறு அறிவித்தல் வரும் வரை தவிர்க்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.