போலி வதந்திகளைப் பரப்பினால் கடும் சட்ட நடவடிக்கை
சமூக வலைத்தளங்களில் அனர்த்தம் தொடர்பான போலியான வதந்திகளைப் பதிவிட்டு பொதுமக்களை பீதிக்குள்ளாக்கும் நபர்களுக்கு எதிராக பொலிஸார் மற்றும் முப்படையினரால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
நாட்டில் அவசரகால நிலையை பிரகடனப்படுத்தி ஜனாதிபதியில் வெளியிடப்பட்ட விசேட வர்த்தமானி அறிவிப்பில், பேரிடரை எதிர் கொள்வதற்காக விசேட ஏற்பாடுகள் மற்றும் அதிகாரங்களும் உள்ளடக்கப்பட்டுள்ளன.

அவசர கால நிலை
நாட்டில் அவசர கால நிலை நிலவுவதால் பொதுமக்களை பாதுகாத்தல், நல்வாழ்வை உறுதி செய்தல் மற்றும் மக்களுக்கு தேவையான பொருட்களை விநியோகித்தல் மற்றும் சேவைகளை முன்னெடுப்பதை நோக்கமாக கொண்டு வர்த்தமானி வெளியிடப்பட்டது.
பொதுமக்களுக்கு ஏற்படக் கூடிய குற்றத்தை தவிர்த்தல், அவர்களது சொத்துகளை பாதுகாப்பது தொடர்பிலும் வர்த்தமானியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அவற்றுள் மக்களை அச்சுறுத்தும், வதந்திகளைப் பரப்பி பீதியடையச் செய்வது தொடர்பில் சட்ட நடவடிக்கை எடுப்பதற்கு பொலிஸார் மற்றும் முப்படையினருக்கு அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது.
வதந்தி அல்லது போலி தகவல்களை வாய்மொழியாகவும் , எழுத்துப்பூர்வமாகவும் , மின்னணு , டிஜிட்டல் அல்லது பிற தொழில்நுட்பங்களின் ஊடாக பகிரும் நபருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும்.
24 மணித்தியாலங்களுக்குள் அவர்கள் பொலிஸ் நிலையத்தில் சரணடைவது அவசியம். இவ்வாறான குற்றச் செயல்கள் தொடர்பில் பொலிஸார் மற்றும் முப்படையினர் நேரடியாக தலையிட்டு விசாரணை செய்ய அதிகாரமளிக்கப்பட்ட உள்ளது.
குறிப்பாக தவறான தகவல்களை உருவாக்கி அவற்றை பகிர்வதால் பொதுமக்களுக்கு நிவாரணம் வழங்கும் நடவடிக்கை தடைப்படலாம் என பொலிஸ் ஊடகப் பிரிவு சுட்டிக்காட்டியுள்ளது.