வேலணையில் குழாய்க் கிணறுகள் அமைத்தால் கடும் நடவடிக்கை
யாழ்ப்பாணம் வேலணை பிரதேச சபையின் ஆளுகைக்குள் முறையான அனுமதி பெறாது குழாய்க் கிணறுகள் அமைப்பது முற்றாக தடைசெய்யப்பட்டுள்ளதாகவும், மீறிச் செயற்படுபவர்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் வேலணை பிரதேச சபை அறிவித்துள்ளது.
இது குறித்து பிரதேச சபையின் தவிசாளர் அசோக்குமாரின் கையொப்பத்துடன் விடுக்கப்பட்டுள்ள சுற்றறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது ,
நன்னீர்க் கிணறுகளை பாதிப்படையச் செய்யும்
வேலணை பிரதேச சபைக்குட்பட்ட இடங்களில் அண்மைக்காலமாக எந்தவிதமான அனுமதியும் பெறப்படாது அதிகளவான குழாய்க்கிணறுகள் அமைக்கப்பட்டு வருகின்றமையை அவதானிக்க முடிகின்றது.
அத்துடன் அமைக்கப்படும் குழாய்க்கிணறுகளை எந்தவிதமான கட்டுப்பாடுகள் மற்றும் போதிய வழிகாட்டுதல்களுமின்றி தான்தோன்றித்தனமாக அமைப்பதானது எமது பிரதேசத்தில் காணப்படுகின்ற மிகச் சொற்பமான நன்னீர்க் கிணறுகளையும் வெகு விரைவில் பாதிப்படையச் செய்யும் ஒரு செயற்பாடாகவே இருக்கின்றது.
இதனால் குறித்த செயற்பாட்டை விரைந்து கட்டுப்படுத்த வேண்டிய அவசியம் எழுந்துள்ளது.
அதனடிப்படையில் குழாய்க்கிணறுகளை அமைக்க உத்தேசித்துள்ளவர்கள் பிரதேச சபையின் ஊடாக தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்புச் சபைக்கு விண்ணப்பித்து, அவர்களது சிபாரிசிற்கு அமைவாகப் பிரதேச சபையின் அனுமதியினைப் பெற்றுக்கொள்வது கட்டாயமானதாகும்.
அத்துடன் உடனடியாக செயற்படும் வண்ணம் இந்த நடைமுறை இறுக்கமாகப் பின்பற்றப்படும் என்பதோடு அனுமதியின்றி குழாய்க்கிணறு அமைப்பவர்களிற்கு எதிராகச் சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் அதே நேரம், குழாய்க்கிணறு அமைக்கும் சேவை வழங்குநர்கள் தங்களது சேவை வழங்கல் தொடர்பாகப் பிரதேச சபையில் உரியப் பதிவுகளை மேற்கொண்டு உரிமப்பத்திரத்தினை பெற்றுக்கொள்வதும் கட்டாயமாக்கப்பட்டுள்ளது .
அத்துடன் குழாய்க்கிணறு அமைக்கும் சேவை வழங்குநர்கள், குழாய்க் கிணறு அமைப்பதற்கான அனுமதிப்பத்திரம் பெற்றுக் கொண்டவர்களுக்கு மாத்திரமே கிணறு அமைத்துக் கொடுக்க வேண்டும் என்பதுடன் அனுமதிப்பத்திரம் இல்லாதோருக்குக் குழாய்க்கிணறு அமைத்துக் கொடுத்தல் தண்டனைக்குரிய குற்றச்செயலாகும்.
குழாய்க்கிணறு அமைப்பதற்கான சேவை வழங்கல் உரிமப்பத்திரமின்றி, எமது பிரதேச சபைக்குள் பிரவேசிக்கும் குழாய்க்கிணறு அமைக்கும் இயந்திரங்கள் மற்றும் வாகனங்கள் தொடர்பில் பிரதேச சபையால் காவல்துறை ஊடாக உரியச் சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் அதில் வலியுறுத்தப்பட்டுள்ளது.