தமிழர் பகுதிகளில் திணிக்கப்படும் பெயர் மாற்றங்கள் ; புராதன சின்னங்களின் தொன்மைக்கு பாதிப்பு
மட்டக்களப்பில் உன்னிச்சை வீதியை ஹென்ஸ்மன் வீதி என்று பெயர் மாற்றியதாக சர்ச்சை கிளம்பியுள்ளது.
இந்நிலையில் கிராமபுறங்களின் புராதன சின்னங்களின் தொன்மையான பெயர்கள் மாற்றப்படுவது குறித்து சமூக வலைத்தளங்களில் பல்வேறு விடயங்கள் பகிரப்படுகின்றன.

சமூக வலைத்தள பதிவு
அதன் படி சமூக வலைத்தள பதிவொன்றில் தமிழர் பகுதிகளில் வீதிகளின் புராதன சின்னங்களின் தொன்மையான பெயர்கள் மாற்றப்படுவது தொடர்பில் விபரிக்கப்பட்டுள்ளதாவது,
ஊர்களின் வீதிகளின் புராதன சின்னங்களின் தொன்மையான பெயர்கள் மாற்றப்படுவது இனத்தின் மரபியல் அடையாள அழிப்பின் மிக முக்கிய கூறுணர்ச்சி பெறுமானம் கொண்டது.
உதாரணமாக தமிழர்கள் வாழ்ந்த ஊர்களின் பெயர்கள் பெரும்பாலும் தரைத்தோற்ற அம்சம் சார்ந்ததாகவோ அல்லது புவியியல் பௌதிக அடையாளம் சார்ந்ததாகவோ இருப்பதைக் கவனிக்கலாம்.
இயற்கையோடு வாழ்ந்து, இயற்கைக்கு நன்றி உணர்வோடு இருந்தவர்கள் தமிழர்கள். மனிதர்களின் பெயர்களை வீதிகளுக்கும் ஊர்களுக்கும் சூட்டுவதை தமிழர்கள் மரபாகக் கொண்டிருக்கவில்லை. அப்படி சூட்டுவது மிக மிக பிந்திய காலத்தில் வந்த ஒரு திணிப்பு எனலாம்.
உதாரணமாக வில் என்று முடியும் பல பெயர்கள் அதுபோல முனை, மடு, கேணி, பள்ளம், கட்டு, குளம், புலவு, வெளி, ஓடை, முறிப்பு,களப்பு கரை, அரிப்பு, வாய்க்கால், வயல், காடு, பட்டி, திடல் என்று இன்னும் பல. குறித்த நிலத்தில் பழமை வாய்ந்த விருட்சங்களையும் பெயர்களாக சூட்டியிருக்கிறார்கள்.
அதுபோல குறித்த காலத்தில் நடந்த சம்பவங்களை ஒட்டியதான பெயர்களும் சூட்டப்பட்டிருக்கின்றன.
குறித்த காலத்தில் குறித்த தொழிலை செய்கின்ற சாதி அடிப்படையிலான சமூகவரையரையை அடையாளப்படுத்தும் விதமாகவும் சில பெயர்கள் சூட்டப்பட்டிருக்கின்றன
போராட்ட இயக்கங்கள் வளர்ச்சியடைந்திருந்த காலங்களில் இறந்த அல்லது சிறந்த போராளிகளின் பெயர்களையும் சூட்டியிருக்கிறார்கள்
மத நிறுவனங்கள் தங்களுடைய மதத்தின் போதகர்கள் அல்லது தூதுவர்களின் பெயர்களையும் வீதிகளுக்கு பின்னாளில் சூட்டியிருக்கிறார்கள். இவை நாளடைவில் பாடப் புத்தகங்களிலும் சேர்க்கப்பட்டு விட்டன என்பது பெருங்கொடுமை.
அதுபோல புத்தளத்திலிருந்து நீர் கொழும்பு வரையான சகல ஊர்களிலும் தமிழ் பெயர்கள் உண்டு. அவற்றை சிங்கள உச்சரிப்புக்கு ஏற்றது போல அர்த்தம் ஏதும் புரியாமல் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
இவை அனைத்தும் நமது வழித்தோன்றல்களின் அல்லது மூதாதையர்களின் வாழ்வியல் அடையாளங்கள், அவர்கள் வாழ்ந்த இடங்களை பேர்களே தாங்கி வரலாறாகி நிற்கின்றன. அவற்றின் மிக நுட்பமாக அழிப்பை அனுமதிப்பது வரலாற்றுத் துரோகம் என்பதை நாம் அறிய வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.