போக்குவரத்தில் ஈடுபடும் திருடப்பட்ட அதி சொகுசு வாகனங்கள் : வெளியான முக்கிய தகவல்
போலி இலக்கத்தகடுகளை பயன்படுத்தி போக்குவரத்தில் ஈடுபடும் 2,267 அதி சொகுசு வாகனங்களை பொலிஸார் இனங்கண்டுள்ளனர்.
போக்குவரத்து விதிகளை மீறும் ஓட்டுநர்களைச் சட்டத்தின் முன் நிறுத்துவதற்காக ஆரம்பிக்கப்பட்ட கொழும்பு நகரத்தின் பல பகுதிகளில் பொருத்தப்பட்டுள்ள பாதுகாப்பு கமராக்கள் ஊடாக இந்த வாகனங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன.

மோட்டார் வாகன விதிகள்
கடந்த டிசம்பர் மாதம் 31 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் மோட்டார் வாகன விதிகளை மீறிய 12,246 வாகனங்களை பொலிஸார் பறிமுதல் செய்துள்ளனர்.
கொழும்பு நகரில் போக்குவரத்து விதிகளை மீறியதாகப் பாதுகாப்பு கமராக்களில் பதிவான 12,246 வாகனங்களில், பதிவு செய்யப்பட்ட உரிமையாளர்களைக் கண்டறிந்த பிறகு 2,267 வாகனங்கள் திருடப்பட்ட வாகனங்களாக அடையாளம் காணப்பட்டுள்ளன.
இவற்றில் 2267க்கும் மேற்பட்ட வாகனங்களின் இலக்கத் தகடுகள் மோட்டார் போக்குவரத்து ஆணைக்குழுவில் பதிவு செய்யப்படவில்லை என்று தெரிவிக்கப்படுகிறது.
சில வாகனங்களின் பதிவு செய்யப்பட்ட உரிமையாளர்களை விசாரித்தபோது, இந்த நபர்களிடம் உந்துருளியை கூட வாங்குவதற்கு வசதி இல்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த 2,267 வாகனங்களும் திருடப்பட்ட வாகனங்கள் எனச் சந்தேகிக்கப்படுவதாக காணொளி கண்காணிப்புப் பிரிவின் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.
அந்த வாகன இலக்கங்களை நாடு முழுவதும் உள்ள பொலிஸ்நிலையங்களுக்கு அனுப்பி, விரைவில் சட்ட அமலாக்க நடவடிக்கை ஆரம்பிக்கப்படும் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
 
                 
                 லங்காசிறி FM
                                லங்காசிறி FM
                             
                             
                             
                             
                             
                             
                             
                                             
         
     
     
     
     
     
     
     
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
        