வாக்குச் சீட்டுகளை அச்சிடும் பணிகள் மீண்டும் ஆரம்பிக்க நடவடிக்கை
நிராகரிக்கப்பட்ட வேட்புமனுக்கள் தொடர்பாக நீதிமன்ற தீர்ப்பு வழங்கப்பட்ட 100 ற்கும் மேற்பட்ட உள்ளூராட்சி மன்றங்களுக்கான உத்தியோகபூர்வ வாக்குச் சீட்டுகளை அச்சிடும் பணிகள் மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளதாக அரச அச்சகத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
குறித்த உள்ளூராட்சி மன்றங்களுக்கான அஞ்சல்மூல வாக்குச்சீட்டுக்களை அச்சிடும் பணிகள் நேற்று ஆரம்பிக்கப்பட்டதாக அரச அச்சகமா அதிபர் பிரதீப் புஷ்பகுமார தெரிவித்துள்ளார்.
இந்த உள்ளூராட்சி மன்றங்களுக்கான வாக்காளர் அட்டைகளை எதிர்வரும் 20 ஆம் திகதிக்கு முன்னதாக தேர்தல் ஆணைக்குழுவிடம் சமர்ப்பிக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த ஆண்டு உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டைகளை 17 மில்லியன் வாக்காளர்களுக்கும் 64 இலட்சம் வீடுகளுக்கும் விநியோகிப்பதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது.
சுமார் 71 ஆயிரம் வேட்பாளர்கள் போட்டியிடும் உள்ளூராட்சி மன்றத் தேர்தல் எதிர்வரும் மே மாதம் 6 ஆம் திகதி நடைபெற உள்ளது.
இதேவேளை, எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான அஞ்சல் மூல வாக்கெடுப்புக்கான திகதிகளில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகத் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல்.ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
அதற்கமைய, எதிர்வரும் 24, 25, 28 மற்றும் 29 ஆம் திகதிகளில் அஞ்சல் மூல வாக்கெடுப்பு இடம்பெறும் என அவர் தெரிவித்துள்ளார்.
முன்னதாக 22 ஆம், 23 ஆம் திகதிகளில் அஞ்சல் வாக்கெடுப்பு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்த போதும், நிராகரிக்கப்பட்ட வேட்பு மனுக்கள் தொடர்பான தீர்ப்பின் நிமித்தம், அந்தத் திகதிகளில் மாற்றம் ஏற்படுத்தப்பட்டுள்ளது.