'டிட்வா' புயல் காரணமாக நிறுத்தப்பட்ட பல ரயில்கள் மீண்டும் சேவையில்
'டிட்வா' புயல் காரணமாக நிறுத்தப்பட்டிருந்த கொழும்பு கோட்டையிலிருந்து திருகோணமலை மற்றும் மட்டக்களப்பு வரையான இரவு நேர தபால் ரயில்கள் உட்பட பல ரயில்களை மீண்டும் சேவையில் ஈடுபடுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.
கொழும்பு கோட்டை - திருகோணமலை இடையில் இரவு நேர தபால் ரயில் ஜனவரி 20 ஆம் திகதி முதல் மீண்டும் சேவையில் ஈடுபடுத்தவும் கொழும்பு கோட்டை - மட்டக்களப்பு இடையில் 'புலத்திசி' நகர கடுகதி ரயிலும் தினமும் சேவையில் ஈடுபடுத்தப்படவுள்ளது.

உதய தேவி ரயில் சேவையையும் அனர்த்த நிலையின் பின்னர் மீண்டும் ஆரம்பிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
இதேவேளை, புயலினால் சேதமடைந்த வடக்கு ரயில் மார்க்கத்தைப் புனரமைக்கும் பணிகள் எதிர்வரும் 19 ஆம் திகதி ஆரம்பிக்கப்படவுள்ளன.
இதன் காரணமாக மறு அறிவித்தல் விடுக்கப்படும் வரை ரயில் சேவைகள் கொழும்பு கோட்டையிலிருந்து மஹவ வரை மட்டுமே மட்டுப்படுத்தப்பட்டுள்ளன.
புனரமைப்புப் பணிகளின் பின்னர் ரயில் சேவைகள் முன்னெடுக்கப்படும் விதம் குறித்து எதிர்காலத்தில் அறிவிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.