சைபர் தாக்குதலைத் தொடர்ந்து புதிய இணையத்தளம் ஒன்றை அறிமுகம் செய்ய நடவடிக்கை
அரச அச்சுத் திணைக்களத்தின் இணையதளம் மீது மேற்கொள்ளப்பட்ட சைபர் தாக்குதலைத் தொடர்ந்து, அரச அச்சுத் திணைக்களத்திற்கு புதிய இணையத்தளமொன்றை அறிமுகம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக இலங்கை கணினி அவசர செயற்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது.
அரச அச்சுத் திணைக்களத்துக்கான புதிய இணையதளம் தற்போது உருவாக்கப்பட்டு வருகிறது. சைபர் தாக்குதலின் பின்னர் உத்தியோகபூர்வ இணையத்தளம் துரிதமாக மீளமைக்கப்பட்டுள்ளது.
எனினும் சைபர் தாக்குதலை மேற்கொண்ட தரப்பினர் குறித்து இதுவரை உறுதிபடுத்தப்பட்ட தகவல்கள் ஏதும் கண்டறியப்படவில்லை.
ஆகையால் பாதுகாப்பான புதிய உத்தியோகபூர்வ இணையதளம் ஒன்றை உருவாக்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக இலங்கை கணினி அவசர செயற்பாட்டுப் பிரிவின் சிரேஷ்ட தகவல் பாதுகாப்பு பொறியியலாளர் சாருக்க தமுனுபொல தெரிவித்துள்ளார்.
இதேவேளை கடந்த 31 ஆம் திகதி அரச அச்சுத் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தின் மீது சைபர் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக இலங்கை கணினி அவசர செயற்பாட்டுப் பிரிவு தெரிவித்திருந்தது.
அடையாளம் தெரியாத நபர் ஒருவர் அரச அச்சுத் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தினுள்ள அனுமதியின்றி உற்பிரவேசித்துள்ளார்.
குறித்த நபர் அச்சுத்திணைக்களத்துக்கு தொடர்பற்ற விடயங்கள் உத்தியோகபூர்வ இணையதளத்தில் வெளியிட முயற்சித்த நிலையில் அதிகாரிகளால் சைபர் தாக்குதல் இடம்பெற்றுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.
அதனைத் தொடர்ந்து கணக்கை மீட்டெடுத்த அதிகாரிகள் உத்தியோகபூர்வ இணையத்தளத்தை மீளமைத்துள்ளனர்.
அத்தோடு கடந்த 30 ஆம் திகதி இலங்கை பொலிஸ் பிரிவின் சமூகவலைதளங்கள் மீது சைபர் தாக்குதல் நடத்தப்பட்டதுடன் குறித்த கணக்குகளும் மீட்டெடுக்கப்பட்டு மீளமைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.