கொழும்பு துறைமுகத்தின் எரிபொருள் கொண்டு செல்லும் நிலத்தடி குழாயை மாற்ற நடவடிக்கை
கொழும்பு துறைமுகத்தின் தெற்கு முனையத்திலிருந்து கொலன்னாவ களஞ்சியசாலைக்கு எரிபொருளைக் கொண்டு செல்லும் நிலத்தடி குழாயில் அடிக்கடி கசிவு ஏற்படுவதன் காரணமாக மாற்றுக் குழாய்களை அமைப்பது குறித்து அதிகாரிகள் அவதானம் செலுத்தியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
அதன்படி, புதிய குழாய்களை இறக்குமதி செய்வதற்குத் தேவையான நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக கனியவளக் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.
கொழும்பு துறைமுகத்தின் தெற்கு முனையத்திலிருந்து கொலன்னாவ களஞ்சியசாலைக்கு எரிபொருளைக் கொண்டு செல்லும் நிலத்தடி குழாயில் நேற்று இரவு மீண்டும் எரிபொருள் கசிவு ஏற்பட்டுள்ளது.
முன்னதாக கசிவு ஏற்பட்டு மூன்று மாதங்களுக்குள் அதே குழாயில் மீண்டும் கசிவு ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இந்நிலையில், கசிவு ஏற்பட்ட இடத்தை கண்டறிவதற்கான நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக இலங்கை கனியவளக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் ஜனக ராஜகருணா எமது செய்தி சேவைக்குத் தெரிவித்தார்.
கொழும்பு துறைமுகத்தின் தெற்கு முனையத்திலிருந்து கொலன்னாவ களஞ்சியசாலைக்கு எரிபொருளைக் கொண்டு செல்லும் 2 குழாய்களில் கடந்த 15 ஆம் திகதி கசிவு ஏற்பட்டது.
இதன்படி, இலங்கை கனியவளக் கூட்டுத்தாபனத்தின் ஊழியர்கள் எரிபொருள் கசிவைத் தடுப்பதற்கு நடவடிக்கை எடுத்திருந்ததுடன், கசிந்த எரிபொருளை சேமிக்கவும் நடவடிக்கை எடுத்திருந்தனர்.
இருப்பினும், எரிபொருள் கசிவு ஏற்பட்டு மூன்று மாதங்களுக்குள், மீண்டும் கசிவு ஏற்பட்டுள்ளது.
எரிபொருள் கசிவு ஏற்பட்ட இடத்திலிருந்து கசிந்த எரிபொருள் கடல் நீருடன் கலப்பதையும் காண முடிந்ததாக இலங்கை கனியவளக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் ஜனக ராஜகருணா தெரிவித்தார்.