இந்து சமுத்திர வலய மாநாடு ஆரம்பம்!
இந்து சமுத்திர வலய மாநாட்டிற்கு இலங்கை தலைமை தாங்கும் வாய்ப்பு கிடைத்துள்ளமை எமது நாட்டுக்கு கிடைத்த அங்கிகாரமாகும் என ஐக்கிய தேசிய கட்சியின் பொதுச் செயலாளர் ரங்கே பண்டார தெரிவித்தார்.
ஐக்கிய தேசிய கட்சி தலைமையகமான சிறிகொத்தாவில் கடந்த (09.10.2023) அன்றைய தினம் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.
மேலும் இதுப் பற்றி அவர் தெரிவிக்கையில்,
இந்து சமுத்திர வலய மாநாடு எதிர்வரும் (11.10.2023) இலங்கையில் இடம்பெற இருக்கிறது. இம் மாநாட்டிற்கு தலைமை தாங்கி எமது நாட்டில் நடாத்த கிடைத்திருப்பது எமக்கு பெரும் கெளரவமாகும்.
அதேபோன்று அடுத்து வரும் இரண்டு வருடங்களுக்கு இந்து சமுத்திர வலய மாநாட்டின் தலைமை பதவி இலங்கைக்கு வழங்கப்பட இருக்கிறது. தற்போது இம்மாநாட்டின் தலைமை பதவியை பங்களாதேஷ் வகித்து வருகிறது.
அத்துடன் இந்த மாநாட்டுக்கு வலயத்தில் இருக்கும் வெளிவிவகார அமைச்சர்கள் அனைவரும் கலந்துகொள்ள இருக்கின்றனர். அவர்கள் ஜனாதிபதியுடன் விசேட கலந்துரையாடல்கள் பல சுற்றுகளை நடத்த இருக்கின்றனர்.
இம்மாநாட்டில் கலந்துகொள்வதற்காக மலேசிய வெளிவிவகார அமைச்சர் இலங்கைக்கு வந்திருக்கிறார். அவுஸ்திரேலியா, இந்தியா, பங்களாதேஷ். ஈரான், ஓமான், இந்துனேசியா, சிங்கப்பூர், ஜப்பான் ஆகிய நாடுகளின் வெளிவிவகார அமைச்சர்கள் இதில் கலந்துகொள்ள இருக்கின்றனர்.
மேலும் இலங்கை பொருளாதார ரீதியில் பாதிக்கப்பட்டு வீழ்ச்சியடைந்திருந்த நிலையில், நாட்டை மீட்பதற்கு ஜனாதிபதி எடுத்துவரும் வேலைத்திட்டங்களுக்கு சர்வதேச நாடுகளின் வரவேற்பு கிடைத்து வருகிறது.
இந்து சமுத்திர வலய மாநாடு எமது நாட்டில் நடத்த அனுமதி கிடைத்திருப்பது அதற்கு சிறந்த உதாரணமாகும்.