ஜெயலலிதா பாணியில் களமிறங்கவுள்ள ஸ்டாலின்!
கடந்த காலங்களில் திமுக ஆட்சியில் அமைச்சர்களாக இருப்பவர்கள், அந்த ஆட்சி முடியும் வரை அவர்கள் மட்டுமே அமைச்சர்களாக இருப்பார்கள். அவர்கள் மீது என்னதான் புகார்கள் வந்தாலும் கூப்பிட்டு கண்டிப்பார்களே தவிர அவர்களை மாற்றவே மாட்டார் கருணாநிதி. ஜெயலலிதாவை போலஉடனடியாக பதவியை பிடுங்க மாட்டார்.
ஜெ. ஆட்சியில் எந்த அமைச்சர்களாலும் நிம்மதியாக தூங்க முடியாது. பொழுது விடிந்தால், புகார் வந்த அமைச்சரின் பதவி பறிக்கப்பட்டிருக்கும். அதுபோலவே, தற்போது ஸ்டாலினும் ஜெயலலிதா பாணியில் சர்வாதிகாரத்தை கையிலெடுக்கப்போகிறாரம், அதுமட்டுமில்லை திமுகவில் இருந்துகொண்டே கட்சிக்கு உள்ளடி வேலை பார்க்கும் நிர்வாகிகள் பலர் இருப்பதாக தகவல்கள் கசிந்துள்ளது.
தேர்தல் முடிந்து கடந்த 20 நாட்களுக்கும் மேலாக முடிவுகளுக்காக காத்துக்கொண்டிருக்கிறது தமிழகம். அதிமுகவின் சுனில் நிறுவனமும், பிகேவின் ஐபேக் நிறுவனமும் அவரவர் கட்சிக்கு சாதகமாக எக்சிட் போல் ரிப்போர்ட்டையும் கொடுத்துள்ளது. அதனால் தான் 2 கட்சிகளுமே அமைச்சர்கள் லிஸ்ட்டை தயார் செய்து விட்டதாக கூறுகிறார்கள்.
அதிலும் திமுக சற்று கூடுதல் தெம்புடனே உள்ளது. அதுமட்டுமில்லாது , கொடைக்கானலில் ரெஸ்ட் எடுத்துவிட்டு சென்னை திரும்பிய ஸ்டாலினை சந்தித்த திமுக வேட்பாளர்கள் மற்றும் நிர்வாகிகள், ஸ்டாலினையே கண்சிவக்க வைத்துள்ள பல சம்பவங்களை நிர்வாகிகள் கொட்டி தீர்த்துவிட்டார்களாம். சில வேட்பாளர்கள் கட்சி நிர்வாகிகள் உள்ளடி வேலை பார்த்ததையும், யாரும் தொகுதிக்குள் சரியாக வேலை செய்யவில்லை என்றும், பல நிர்வாகிகள் கொடுத்த காசை அமுக்கிக்கொண்டதையும் ஸ்டாலினிடம் சொன்னார்களாம்.
அடுத்து நாம்தான் ஆட்சி அமைக்க போகிறோம், தொகுதிக்குள் இது போன்ற பிரச்சனைகள் கிளம்பாமல் இருக்க வேண்டும் என்றால், ஜெயலலிதா ஸ்டைலில் நீங்கள் சர்வாதிகாரத்தை உங்கள் கையில் எடுங்கள். எப்படி ஜெயலலிதா கட்சியின் கடிவாளத்தை எப்படி கடைசிவரை வைத்திருந்தாரோ, அதுபோலவே நீங்களும் தயவுதாட்சனை பார்க்காமல் பார்த்துக்கொள்ளுங்கள் என கூறுகின்றனராம். அதோடு குடும்பத்தினர் யாரையும் நிர்வாகத்தில் தலையிட அனுமதிக்க வேண்டாம்.
அப்படி தலையீடு இருந்தால் அதுவே நீங்கள் அமைக்கப்போகும் ஆட்சிக்கு வீழ்சசியாக அமைந்துவிடும் எனவும் எச்சரிக்கை செய்துள்ளார்களாம்.
இதையெல்லாம் சைலண்ட்டாக கேட்டுக்கொண்ட ஸ்டாலின் அநேகமாக ஜெயலலிதா பாணி அரசியலையே செய்வார் என தெரிகிறதாக தமிழக தகவல்கள் தெரிவிக்கின்றன.