மலேசியாவில் போலி கடவுச்சீட்டை வைத்திருந்த இலங்கை பிரஜை கைது
மலேசியா - தாய்லாந்து எல்லைச் சோதனைச் சாவடியில் வைத்து, போலி மலேசியக் கடவுச்சீட்டை வைத்திருந்த இலங்கைப் பிரஜை ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
21 வயதான இவர், ‘ராஜா டெனி டெனிஸ்’ என்ற பெயர் கொண்ட கடவுச்சீட்டைப் பயன்படுத்தி தாய்லாந்திற்கு செல்ல முயன்றபோது, மலேசியாவின் குடிவரவு, சுங்கம், தனிமைப்படுத்தல் மற்றும் பாதுகாப்பு வளாகத்தில் தடுத்து வைக்கப்பட்டதாக அதன் இயக்குனர் முகமட் ரிட்சுவான் முகமட் ஜைன் தெரிவித்துள்ளார்.
மலேசிய குடிமகனாக தம்மை ஆள்மாறாட்டம் செய்து தாய்லாந்திற்கு செல்ல முயன்றபோது இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந் நிலையில், செல்லுபடியாகும் பயண ஆவணம் இன்றி நாட்டிற்குள் நுழைந்து தங்கியிருந்தமைக்காக சந்தேகநபர் குடிவரவு சட்டத்தின் கீழ் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக ரிட்சுவான் கூறியுள்ளார்.
தாய்லாந்து அதிகாரிகளுக்கும் தமக்கும் இடையிலான மூலோபாய ஒத்துழைப்பின் விளைவாகவே குறித்த இலங்கையர் கைது செய்யப்பட்டதாக மலேசிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.