பணிப்புறக்கணிப்பை கைவிட்ட மின்சார தொழிற்சங்கங்கள்
மின்சார தொழிற்சங்கங்களால் முன்னெடுக்கப்பட்டிருந்த பணிப்புறக்கணிப்பு போராட்டம் கைவிடப்பட்டுள்ளது.
தொழில் ஆணையாளர் நாயகம் மற்றும் புதிய மின்சார நிறுவனங்களின் தலைவர்களுடன் இன்று பிற்பகல் இடம்பெற்ற பேச்சுவார்த்தைகளைத் தொடர்ந்து, இந்த முடிவை தொழிற்சங்கங்கள் எடுத்துள்ளன.

தற்போதைய சிக்கல்கள் குறித்து ஜனாதிபதியுடன் நேரடியாக கலந்துரையாட நாளைய தினம் வாய்ப்பை ஏற்படுத்தி தருவதாக தொழில் ஆணையாளர் நாயகம் தொழிற்சங்கங்களிடம் உறுதியளித்துள்ளார்.
இதையடுத்து , பாதிக்கப்பட்டிருந்த மின்சார விநியோகப் பராமரிப்புப் பணிகளை மீள வழமைக்குக் கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
கடந்த 09 ஆம் திகதி பிற்பகல் முதல் ஆரம்பிக்கப்பட்ட தொழிற்சங்க நடவடிக்கையினால், நாட்டின் பல பகுதிகளில் மின்தடை மற்றும் மின்சாரப் பராமரிப்புப் பணிகளில் பாதிப்புகள் ஏற்பட்டிருந்தன.
எனினும் ஜனாதிபதியுடனான நாளை கலந்துரையாடலின் பின்னரே, இந்த தொழிற்சங்கப் போராட்டத்தின் எதிர்கால செயற்பாடு மற்றும் மின்சார கட்டமைப்பில் உள்ள சிக்கல்களுக்கான தீர்வுகள் குறித்து இறுதித் தீர்மானம் எடுக்கப்படும் என மின்சார தொழிற்சங்கங்கள் தெரிவித்துள்ளன.