இலங்கையில் 5 வயதுக்கு குறைவான 42 குழந்தைகள் சிறைக்குள் ; வெளியான அதிர்ச்சி தகவல்
இலங்கையில் தாய்மார்கள் செய்த தவறுகளால் 5 வயதுக்கு குறைவான 42 குழந்தைகள் சிறையில் உள்ளதாக சிறைச்சாலைகள் ஆணையாளர் ஜகத் வீரசிங்க தெரிவித்துள்ளார்.
நேற்று (27) போதைப்பொருள் தடுப்பு தொடர்பாக பாடசாலை மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் நிகழ்வொன்றில் கலந்துகொண்ட போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அரசாங்கத்தின் பொறுப்பு
தங்கள் தாய்மார்கள் செய்த தவறுகளால் 5 வயதுக்கு குறைவான 42 குழந்தைகள் சிறையில் உள்ளனர். வழக்குகளை விசாரித்து 10 ஆண்டுகள் தண்டனை விதிக்கப்பட்டது என்று வைத்துக்கொள்வோம்.
5 ஆண்டுகள் வரை தாயும், குழந்தையும் ஒன்றாக இருக்க அனுமதிக்கிறோம். 5 வயது பூர்த்தியாகும் நாளில் குழந்தையையும் தாயையும் பிரித்து வைக்கின்றோம். அது என் வாழ்க்கையில் நான் கண்ட மிக சோகமான சந்தர்ப்பங்களில் ஒன்றாகும்.
குழந்தை அம்மாவை வேண்டி அழுகிறது. அம்மாவும் குழந்தையை வேண்டி அழுகிறாள். 5 வருடங்களாக அவர்களுக்கு இருந்த ஒரே உறவு அதுதான். அதில் சட்டம் குறுக்கிடுகிறது.
அதனால் ஒருபோதும் ஒரு பெண்ணாக நீங்கள் தவறு செய்யாதீர்கள். போதைப்பொருள் இல்லாத நாட்டை உருவாக்க இந்த அரசாங்கத்திற்கு மிகப் பெரிய பொறுப்பு உள்ளது என தெரிவித்தார்.