வெளிநாடு ஒன்றுக்கு வீட்டு வேலைக்கு சென்ற இலங்கை பெண்ணுக்கு நேர்ந்த அவலம்!
சிரியா நாட்டில் வீட்டு வேலைக்கு சென்ற இலங்கை பெண்ணொருவர் கடுமையான சித்திரவதைகளுக்கு உள்ளாகியிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
இச்சம்பத்தில் குருநாகல் - தம்பதெனிய பகுதியைச் சேர்ந்த 34 வயதுடைய திருமணமாகாத துஷாரிகா கல்தேரா என்ற பெண்ணே இவ்வாறு பாதிக்கப்பட்டிருப்பதாக தெரியவந்துள்ளது.
குறித்த பெண் பணிபுரியும் வீட்டின் உரிமையாளர்கள் அவர் மீது கொடூரமான தாக்குதல்களை மேற்கொள்வதுடன், பாலியல் ரீதியான தொந்தரவுகளை அளிப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒரு ஆண்டு மற்றும் 9 மாதங்களுக்கு முன் வீட்டு வேலைக்காக டுபாய் நகரிற்கு சென்ற அவர், அங்கு ஒரு வீடொன்றில் பாதுகாப்பாக இருந்துள்ளார்.
இருப்பினும், அந்த வீட்டு உரிமையாளர்கள் வேறு நாட்டிற்கு சென்றமையால், இலங்கை செல்வதற்கான விமான டிக்கெட்டை துஷாரிகாவிடம் கொடுத்து அவரை வேலைவாய்ப்பு நிறுவனத்திடம் ஒப்படைத்துள்ளனர்.
விமான டிக்கெட் கையிலிருந்த போதும் குறித்த வேலைவாய்ப்பு நிறுவனம், அவரை சிரியாவில் உள்ள வீடொன்றின் உரிமையாளர்களிடம் விற்றுள்ளது.
தற்போது சிரியாவில் உள்ள வீடொன்றில் பணிப்பெண்ணாக பணிபுரிந்து வரும் இவர், கடும் சித்திரவதைகளுக்கு மத்தியில் பல மாதங்களாக சம்பளம் இன்றி வேலை செய்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த நிலையில், தன்னை தாய்நாட்டிற்கு அழைத்து வருமாறு இலங்கை அரசிடம் துஷாரிகா கோரிக்கை விடுத்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.